Posted in சிறுகதை, தமிழ், History, inspirational, modern, New, short story, tamil

வேண்டாம் என்றானே!

தென்னிந்தியாவின் நடுமையத்தில் ரம்மியமாய் அமைந்திருந்த விருதுநகர் என்னும் ஊரில் சிறுவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். தெளிந்த வானத்தை போன்று எளிமையானவன் அவன். பொன்னோ பொருளோ ஏதும்இன்றி சாதாரண சிறுவனாய் சுற்றி வந்தான். அவனிடம் சூப்பர் ஹீரோ சக்திகளோ கின்னஸ் புத்தகத்தில் இடம் பெரும் அளவிற்கு திறமைகளோ இருந்ததில்லை. ஆனால் நம் எல்லோரிடமும் இல்லாத ஒரு அற்புத குணம் அவனிடம் இருந்தது. “வேண்டாம் என்று கூறும் தைரியம் அவனுக்கு இருந்தது”. இதில் என்ன பெரிய அதிசயம்? என்று நீங்கள் கேட்கலாம். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், இந்த உலகம் என்ன நினைக்கும் என்று ஒவ்வொரு நொடியும் யோசிக்கும் நம்மை போன்ற மனிதர்கள் மத்தியில் இதை எல்லாம் சிறிதும் கண்டு கொள்ளமல் தன் மனம் போன போக்கை பின் தொடரும் மிக பெரிய தைரியம் அந்த சிறுவனுக்கு இருந்தது. அவனின் இந்த தைரியம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தது. அவர்களின் கனவுகள் நினைவாக வழி வகை செய்தது. அவ்வளவு பெரிய மனிதனாய் மாறினான் இந்த சிறுவன். இந்த அற்புத சிறுவனின் கதையை சொல்லட்டுமா?


தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம்

அந்த சிறுவனுக்கு 6 வையதிருக்கும் போது மரணம் அவன் வீட்டிற்குள் நுழைந்து அவன் தந்தையை தன்னுடன் கூட்டி சென்றது. அன்றைய தினம் அவன் தன் வாழ்வின் மிக பெரிய முடிவொன்றை எடுத்தான். கல்வி வேண்டாம் என்றான். தன் பள்ளி நினைவுகளை எல்லாம் மூட்டை கட்டி விட்டு, தன்னை நெருக்கி கொண்டிருந்த வறுமையை எதிர்த்து போராட ஆரம்பித்தான்.

காலங்கள் உருண்டோடியது. அந்த சிறுவன் மதிப்பு மிக்க இளைஞனாய் வளர்ந்தான். தனது தந்தையின் மளிகை வியாபாரத்தின் மூலம் தன் தாயையும் தங்கையையும் கவனித்துக் கொண்டான். முன்று வேலை உணவு, இருக்க நல்ல வீடு – வாழ்க்கை அவன் எதிர்பார்த்ததை விட நன்றாக மாறியது. “கல்யாணம் பண்ணிக்கோடா ராசா. என் கண்ணு குளிர பாக்க வேண்டாமா” ஒவ்வொரு இரவும் அவன் தாய் கெஞ்சினாள். ஆனால்  

அவனுக்கோ விண்ணை தொட ஆசை. அந்த குட்டி கிராமத்தில் தன் வாழ்வை முடித்துக் கொள்ள அவன் விரும்ப வில்லை. அவனது பதினெட்டாம் வயதில் யாருமே எதிர்பார்த்திராதா, நம்மில் பெரும்பாலானோர் செய்ய துணியாத ஒன்றை செய்தான். அவன் தனது குடும்பம், தொழில், எங்கோ காத்திருந்த முறைப்பெண் என தன்னை கட்டி வைத்திருந்த பாரங்களுக்கெல்லாம் ஒரு முற்றுபுள்ளி வைத்து விட்டு இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்க இந்திய தேசிய காங்கிரஸில் நுழைந்தான்.

அவன் செய்தது சரியா? தவறா? யாருக்கும் தெரியும். ஒரு வேலை தவறான முடிவாக கூட இருக்கலாம். ஆனால் அந்த குட்டி கிராமத்தின் எல்லைக்குள் தன் வாழ்க்கை முடிந்து விடுமோ என்ற பயம், விடை தெரியாத இந்த விடுதலை போராட்டத்தில் அவனை உந்தியது. தெருக்களிலும் வீதிகளிலும் சுதந்திர சுடரை பரப்ப ஆரம்பித்தான். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக ஏராளமான போராட்டங்களில் பங்கேற்றான். பல முறை கைது செய்யப்பட்டு சிறைக்கும் சென்றான் அந்த இளைஞன்.

அவனது 2௦ வருட கடின உழைப்பிற்க்காண பலன் ஒருநாள் அவன் வீடு தேடி வந்தது. கவுன்சிலர் என்னும் பதவியை அவனிடம் நீட்டியது. மாதா மாதம் தவறாமல் சம்பளம், கவுன்சிலர் என்னும் பட்டம், அதனோடு சேர்ந்த அதிகாரம். தெரு தெருவாய் சுற்றி வந்த அவனுக்கு ஒரு நிலையான பாதையாய் அமைந்தது அந்த பதவி. வயதாகி கொண்டே சென்ற அவனுக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பு. எந்த ஒரு புத்திசாலி மனிதனும் மகிழ்ச்சியுடன் அதனை ஏற்று கொண்டிருப்பான். ஆனால் அவனோ இந்த பதவி தனக்கு வேண்டாம் என்றான். “பதவிக்காக வேலை செய்பவன் நான் இல்லை. என் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். அது தான் என் குறிக்கோள். அதற்க்கு உதவாத எந்த பதவியும் எனக்கு தேவை இல்லை” என்று தைரியமாக கூறினான் அவன்.

உலகம் அவனை பைத்தியம் என்று எள்ளியது. அவனோ தன் கண்களுக்கு மட்டுமே புலப்பட்ட தன் கனவை நோக்கி நடந்தான்.  

அவனது ஐம்பதாம் வயதில் தன் வாழ்வில் மிக பெரிய மையில்கல்லை அவன் எட்டினான். தமிழ்நாட்டின் முதல்வராக அவன் தேர்ந்தெடுக்கப்பட்டான். அவனது அமைச்சரவையை தேர்வு செய்ய வேண்டிய நேரம் வந்தது. “எப்பவும் போல நம்ம கட்சில இருந்தே அமைச்சர்கள தேர்ந்தெடுத்து இலாகா ஒதுக்கணும் தலைவரே” கட்சி நிர்வாகம் அவனிடம் கூறியது. ஆனால் எப்பவும் போல அவன் தன்கென்று தேர்ந்தெடுத்த தனி வழியில் செயல்பட்டான். தன்னை எதிர்த்து போட்டியிட்ட சட்ட மேதையான சுப்பிரமணியனை தனது நிதி அமைச்சராக நியமித்தான். அவன் முடிவுக்கு பல எதிர்ப்புகள் எழுந்தன. “ஒருவர் குறைகளை இன்னொருவர் நிறைவு செய்து ஒன்றாய் செயல் பட வேண்டியா அமைச்சரவையில் படிப்பறிவில்லாத என் குறைகளை தீர்க்க சுப்பிரமணியனை போன்றதொரு படித்த மேதை நிச்சயம் தேவை” என்று புன்னகை சேர்ந்த துணிவுடன் கூறினான்.

“கருவூலம் காலி தலைவரே. அரசு பள்ளிகளை நடத்த கூட காசு இல்ல”, தமிழகத்தின் முதல்வராய் அவன் கேட்ட முதல் வார்த்தைகள் இவை.

குலகல்வி திட்டம் – பள்ளி இயங்கும் நேரத்தை 6 மணி நேரத்தில் இருந்த 3 மணி நேரமாக குறைபதன் மூலம் இப்போது இருக்கும் ஆசிரியர்களை கொண்டே இரு மடங்கு மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் திட்டம். “குழந்தைகள் தங்கள் குடும்ப வர்த்தகத்தை ஓய்வு நேரத்தில் கற்றுக்கொள்ளலாம். ஒரு குயவனின் மகன் குயவன் ஆகட்டும், வணிகனின் மகன் வணிகம் கற்றுக் கொள்ளட்டும். நாம் இருக்கும் நிலைமையில் இதை தான் நம்மால் செய்ய முடியும். நெருக்கடி காலங்களில் முழுமையான கல்வி சாத்தியமில்லை” அவன் அமைச்சர்கள் முன்மொழிந்தனர்.

ஆனால் அவனோ “குலகல்வி திட்டமாவது மண்ணாவது. இந்த மாதிரி அறை குறை திட்டம் எல்லாம் தமிழ் நாட்டுக்கு வேண்டாம். என் மக்களுக்கு தரமான சமமான கல்விய நானே தருவேன்” என்று சவால் விட்டான்.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு முதலமைச்சர் வீடு வீடாக சென்று தன் மக்களுக்காக நிதி திரட்டினார். அவமானமும் கேலி பேச்சும் அவனை பின் தொடர்ந்தது. சிலர் அவனை எள்ளினார். சிலர் அவனை முட்டாள் என்றனர். ஆனால் நல்ல மனிதர்கள் சிலர் அவன் செயலை பாராட்டினர். தங்களால் முடிந்த வரை உதவி செய்தனர். இதன் மூலம் பிறந்தது தான் மாநில கல்வி தொண்டு இயக்கம்.

இவ்வியக்கத்தின் மூலம் திரட்டிய நிதியால் மாநிலம் முழுவதும் பல புதிய பள்ளிகள் திறக்கப்பட்டன. பழைய பள்ளிகள் சீர் செய்யப்பட்டன.

ஆனால் இதையெல்லாம் தாண்டி முதல் முறையாக மதிய உணவு திட்டம் அணைத்து பள்ளிகளிலும் தொடங்கப்பட்டன. “ஒரு முறை என் பயணத்தின் போது மாடு மேய்ச்சிட்டு இருந்த சிறுவன் ஒருவன பார்த்தேன். ஏன் டா தம்பி, பள்ளி கூடத்துக்கு போகலையானு கேட்டபோ அந்த சிறுவன் சொன்னான் – ஐயா பள்ளிக்கு போன மூளைக்கு சோறு கிடைக்கும் ஆனா வைத்துக்கு? பசி முக்கியமா பள்ளி முக்கியமானா பசி தான ஐயா முக்கியம் அப்படின்னு சொன்னான் அந்த சிறுவன். அன்னைக்கு முடிவு செஞ்சேன். பள்ளிக்கூடம் மூளைக்கு மட்டும் இல்ல வயித்துக்கும் உணவளிக்கணும் அப்படின்னு. அதன் மூலம் பிறந்தது தான் இந்த மதிய உணவு திட்டம்” என்று மேடைகளில் முழக்கமிட்டான் அவன்.

இத்திட்டத்திற்கு பொது மக்கள், பிற மாநில அரசுகள், பத்திரிகைகள் என எல்லோரிடமும் இருந்து பாராட்டுகளும் ஆதரவும் குவிந்தது. பள்ளிகளில் சேர மாணவர்களுக்கு பெரும் ஊக்கமாக மாறியது. சாதி வேறுபாட்டை களையவும் கல்வி புரட்சியை தொடங்கவும் வழி வகை செய்தது

அவனின் முயற்சிகளின் மூலம் கிட்ட தட்ட 80,000 மில்லியன் ரூபாய் தன்னார்வ நன்கொடைகள் மூலம் திரட்டப்பட்டது. 2,00,000 மாணவர்கள் புதிதாக பள்ளிகளில் சேர்ந்தனர். 15,000 க்கும் மேற்பட்ட பள்ளிகள் மாநிலம் முழுவதும் கட்டப்பட்டன.

உலகமே முடியாது என்று கூறிய போதும் அதையெல்லாம் ஓரம் கட்டி விட்டு தன் முயற்சியினால் தான் சொன்ன சொல்லை நிறைவேற்றி முடித்தான் நம் ஹீரோ.

இன்றும் கூட லட்சகணக்கான மாணவர்களின் அறிவு பசியையும் வயிற்று பசியையும் ஆற்றும் உறைவிடமாய் தமிழக பள்ளிகள் அமைவதற்கு அவன் தான் காரணம். விண்ணை தாண்டி பறப்பதற்கு அவர்களுக்கு சிறகளித்தவன் அவன் தான். இன்று தமிழர்கள் பல பன்னாட்டு நிறுவனங்களில் தலைவர்களாய் இருப்பதற்கும் உலகின் எல்லா நாடுகளிலும் கோடி கட்டி பறப்பதற்கும் அவனும் ஒரு காரணம். இந்த கதையை எழுதும் நானும் கூட அவன் திறந்த பள்ளிகளில் ஒன்றில் படித்தவன் தான்.

நம் ஹீரோவின் ஆட்சியில் தமிழ்நாடு பொருளாதாரத்தில் செழித்தது. பல தொழில்துறை பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. அணைகள் மூலம் நீர் பாசன வசதி செய்யப்பட்டு விவசாயம் செழிக்க வழி வகை செய்யப்பட்டது. தமிழ்நாடு அவனின் 9 வருட பொற்கால ஆட்சியில் மலர்ந்தது.

ஆனால் இந்த வசந்த காலம் நீண்ட நாள் நிலைக்கவில்லை.

“முதல்வர் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டார்” என்ற அதிர்ச்சி செய்தி மூளை முடுக்கெல்லாம் பரவியது. “முதல்வர் ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தாரு?” தெருக்கள் தோரும் மக்கள் குழம்பி நின்றனர்.

“பொருளாதார வளர்ச்சி, மக்கள் முன்னேற்றம் என ஒரு பக்கம் மகிழ்ச்சி சூழ்ந்து இருக்க மறு பக்கத்திலோ என்னை வளர்த்த என் கட்சி – இந்திய தேசிய காங்கிரஸ் நோயுற்று கிடக்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டிருக்கிறாள். எனக்கிருக்கும் இந்த பெயர் புகழ் பதவி எல்லாம் அவள் தந்தது. இப்படி இருக்க அவள் நிலையை கண்டும் காணாமல் என்னால் எப்படி இருக்க முடியும்? அவளை மீட்டெடுக்க வேண்டியது என் கடமை. . ஐ.என்.சி யின் தலைவர்களே கேளுங்கள்! உங்கள் பதவிகளை தூக்கி எறிந்து விட்டு ஐ.என்.சி யின் வேர்களை வலுப்படுத்த முன் வாருங்கள். ஐ.என்.சி பதவி பித்து பிடித்தவர்களால் அல்ல, இந்த நாட்டை நேசிக்கும் மனிதர்களால் ஆனது என்று இந்த உலகிற்கு நிருபியுங்கள்” ஆணித்தரமாய் கூறினான்.

சொன்னவாறே தன் சிங்காசனம் வேண்டாம் என்று உதறி தள்ளி விட்டு கட்சியை வலுபடுத்த தொடங்கினான்.   

பதவியை அவன் விட்டாலும் பதவி அவனை விட்டபாடில்லை. இந்தியாவின் மிக பெரிய சிம்மாசனம் அவனுக்காக காத்திருந்தது. பிரதமர் என்னும் பட்டம் – அவன் வீடு தேடி நின்றது. ஆம், 196௦ களில் நடந்த தேர்தலில் அவன் பிரதமர் பதவியில் போட்டியிட்டு வெற்றிபெறுவான் என்று உலகமே எதிர்பார்த்திருந்தது. ஆனால் என் ஹீரோவோ இதற்கெல்லாம் மயங்கவில்லை. “பதவியும் வேண்டாம் புகழும் வேண்டாம்” என்று ஆணித்தரமாக கூறினான்.

மற்றவர்களுக்கு உதவுவதையும் அவர்கள் புன்னகைக்கு காரணமாய் மாறுவதையும் தன் வாழ்கையின் இலட்சியமாக்கிக் கொண்டான். தனது பெரும் முயற்சியின் மூலம் இந்திரா காந்தியையும் லால் பகதூர் சாஷ்திரியையும் சுதந்திர இந்தியாவின் அடுத்தடுத்த பிரதமர்களாக பதவி வகுக்க உதவினான்.

அவரன் முதல்வராக இருந்த காலத்தில், விருதுநகர் நகராட்சி அவனது வீட்டிற்கு நேரடி நீர் இணைப்பை வழங்கியபோது, ​​அத்தகைய சிறப்பு சலுகைகள் எல்லாம் தனக்கு வேண்டாம் என்று ஏற்க மறுத்துவிட்டான்.

முதலமைச்சராக தனக்கு வழங்கப்பட்ட இசட்-லெவல் பாதுகாப்பைப் பயன்படுத்த மறுத்தான். அதற்கு பதிலாக ஒரே ஒரு போலீஸ் ரோந்து வாகனத்துடன் பயணம் செய்தான். அவன் இறுதிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை, சொத்துக்கள் ஏதும் சேர்க்கவில்லை, அதிகாரத்திற்கு அடிமையாக வில்லை, ஒரு ரூபாய் கூட லஞ்சம் பெற்றதில்லை. அவன் இறந்தபோது, 130 ரூபாய் பணம், 2 ஜோடி செருப்பு, 4 சட்டை, 4 வேட்டி மட்டுமே அவன் உடைமையாக இருந்தது.

தனது கடைசி மூச்சு வரை, அநீதியையும் வறுமையையும் சமூகத்தை விட்டு அகற்ற போராடினான். யாருமே எதிர்பார்த்திராத உயரங்களையும் அடைந்தான்.

பணம், பெயர், புகழ், பதவி இவை எல்லாம் அவன் வாசலில் காத்துக் கிடந்த போதும் இவை ஏதும் வேண்டாம் என்று கூறி மக்களுக்கு நல்லது செய்வதை தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டான். அதை சாதித்தும் காட்டினான்.

வேண்டாம் என்று சொன்னானே அவன்.

அவன் வெறும் யாரும் இல்லை – கல்வி கண் திறந்த வள்ளல், கருப்பு சிங்கம், படிக்க மேதை, ஏழைகளின் தலைவன், கர்மவீரன் காமராசனே!

கர்மவீரர் காமராசர்

மதிய உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு உணவு வழங்கும் காமராசர்

சில நேரங்களில் நம் ஹீரோவை போல

வேண்டாம் என்று சொல்ல துணிவோமே!

வாய்ப்புகளை இருக்க பிடித்துக் கொள்

சலுகைகளை இருக்க கட்டிக் கொள்

இப்படி ஒரு வாய்ப்பு மீண்டும் கிடைக்காது

இப்படி ஒரு சலுகை பூமியிலே இல்லை

இந்த உலகம் உன்னிடம் கூறினாலும்

இது நமக்கு ஏற்றதா? என் வளர்ச்சிக்கு உதவுமா?

என் சந்தோஷத்திற்கு வழி வகுக்குமா?

என்று ஒரு முறை சிந்தித்துக் கொள் நண்பா

நீ வேண்டும் என்று ஏற்கும் ஒவ்வொரு முறையும்

மற்ற எல்லா வாய்ப்புகளையும் உனக்கே தெரியாமல் வேண்டாம் என்று உதறி தள்ளுகிறாய்

வேண்டும் வேண்டும் என்ற பித்தில் திரியும் இவ்வுலகில்

வேண்டாம் என்று கூறவும் கற்றுக் கொள்!

வணக்கம்

கதாசிரியரிடம் இருந்து,

என்ன நண்பர்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க? சாப்பிட்டாச்சா? கொரோனா லாக் டவுன்லாம் எப்படி இருக்கு?

கதை கொஞ்சம் கால தாமதமாகி விட்டது. அடியேனை மன்னித்து விடுங்கள்.

கதை எப்படி இருக்கு? எல்லாத்துக்கும் ஆமாம் ஆமாம் சொல்லி பழகிய நமக்கு வேண்டாம்னு சொல்றது கஷ்டம் தான்.

கொஞ்சம் கொஞ்சமா கத்துப்போமே? சரியா?

இது போன்ற கதைகளை படிக்க இந்த தொகுப்பு பட்டனை கிளிக் செய்யுங்க.

மீண்டும் சந்திப்போம் 🙂

Leave a comment