Posted in சிறுகதை, தமிழ், fiction, inspirational, modern, short story

காலி சீட்

என் முன்னோர்களைப் போல நான் போர் களத்திர்க்கெல்லாம் சென்றதில்லை. ஆனால் சென்னை பட்டணத்தின் திங்கள்கிழமை இரவு 7 மணி பஸ்சில் பயணம் செய்திருக்கிறேன். கிட்ட தட்ட இரண்டுமே ஒன்று போல தான் தோன்றியது.

அந்த உலோகக் கூண்டுக்குள் அடைப்பட்டு, மிதிப்பட்டு, நசுக்கப்பட்டு மூச்சு திணறி நிற்பது நடுத்தர மனிதர்கள் தினம் தினம் சந்திக்கும் போர்களமே.

இத்தகைய போராட்டத்தின் நடுவில் ஒரு காலி சீட் கிடைப்பதென்பது தலைவர் படத்திற்கு முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் கிடைப்பதை விட மிக கடினமானது.

இந்த பேருந்து பயணத்தின் பேசப்படாத விதிகளை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இடது புற இருக்கைகள் பெண்களுக்கும் வடது புறம் ஆண்களுக்கும் என ஒதுக்கப்பட்டிருக்கும்.

பெண்கள் ஆண்கள் இருக்கைகளில் அமரலாம். ஆனால் ஆண்கள் எக்காரணத்திற்க்கும் பெண்கள் இருக்கைகளில் அமர கூடாது. மீறினால் வசை வார்த்தைகள் வாரி இறைக்கப்படும்.

இந்த விதிகளை யார் உருவாக்கினார்கள்? எப்படி எல்லாருக்கும் அதை தெரிவித்தார்கள்? என்று பல நாட்கள் நான் சிந்தித்ததுண்டு. ஆனால் இறுதி வரை பதில் கிட்டவில்லை.

அந்த நாள்,

எப்போதும் போல என் ஹீரோ நிரம்பி வழிந்த அந்த பேருந்திற்குள் நுழைந்தான். நான்கு பேரிடம் மிதிப்பட்டு நசுங்கி கிசுங்கி கடைசியாக நிற்பதற்கு ஏற்ற இடத்தை கண்டுபிடித்தான். வாழ்க்கை எப்போதும் விடு அன்று கொஞ்சம் எக்ஸ்ட்ரா கடினமாக தோன்றியது.

அவனுக்கு அருகில் இருந்த இருக்கையில் இரண்டு பெண்கள் அமர்ந்திருந்தனர். அது ஆண்களின் இருக்கையாக இருந்தாலும் அந்த பேசப்படாத விதி அவனை மௌனம் காக்க செய்தது.

அந்த இரண்டு பெண்களில் ஒருவர் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விடவே அந்த அற்புதமான “காலி சீட்” அவனுக்கு முன்பாக தோன்றியது. ஆனால் அவன் சந்தோஷம் நீண்ட நேரம் நிலைக்க வில்லை. அவன் அருகில் அழகான பெண் ஒருத்தி நின்றுக் கொண்டிருந்தாள்.

“ஒரு நல்ல ஆண் மகன் – தைரியமானவன், வலிமைமிக்கவன், போராளி, பெண்களை மதிப்பான், அவள் பலவீன பாண்டம் என்று அறிந்து அவளை பாதுகாப்பான். அப்படி பட்ட ஒரு நல்ல ஆண் மகனாய் எல்லாருக்கும் முன் மாதிரியாய் இந்த பெண்ணிற்கு இந்த காலி சீட்டை நான் விட்டு கொடுக்க வேண்டும்” அவன் மூளை ஒரு பக்கத்தில் சொற்பொழிவு நடத்தினாலும், சோர்வுற்றிருந்த அவன் உடலும் வலுவிழந்து நடுங்கிய அவன் கால்களும் அதை சிறிதும் மதிக்காமால் அந்த சீட்டை நோக்கி பாய தயாராகின.

அவன் மூளைக்கும் மனதுக்கும் இடையே மகாபாரத போரே நடந்துக்கொண்டிருக்க, என்ன செய்வதென்றே தெரியாமால் குழம்பி நின்றான் என் ஹீரோ.

நடக்கும் போரை உணர்ந்த அந்த பெண் “நீங்க உட்கார்ந்துக்கோங்க சார்” என்று புன்னகைத்தால்.

அவ்வளவு தான் அடுத்த நொடி அவனையே அறியமால் அவன் உடல் மின்னல் வேகத்தில் அந்த இருக்கையில் போய் அமர்ந்தது. “அப்பாடா” புன்னகை கலந்த பெருமூச்சு விட்டான் ஹீரோ.

அன்றிரவு இந்த உலகம் அவனுக்கு சொல்ல மறந்த ஓர் ரகசியத்தை அவன் உணர்ந்தான்.

“பெண்களால் எல்லாம் செய்ய முடியும், தன் திறமையால் உலகையே நடத்தும் சக்தி அவளுக்கு உண்டு என்று பெண்ணியத்தை பற்றி கூச்சலிடும் இதே உலகம் தான் “ஏம்பா பொம்பளைய போய் லைன் ல நிக்க விடற” என்று ரேஷன் கடைகளில் முந்தி சென்றும், “3௦% இட ஒதிக்கீடு இல்லன பெண்களால முன்னேறவே முடியாது” என்று பெண்களின் திறனை சந்தேகித்தும் வருகிறது. பேச்சுக்கும் செயலுக்கும் சம்மந்தமே இல்லமால் இருப்பதற்கு பெயர் பெண்ணியம் இல்லை.

ஆணும் பெண்ணும் சமம். பல நேரங்களில் வலிமை மிக்க ஆண் கூட சில நேரம் பலவீனன் ஆகலாம். பல நேரம் பாதுகாக்க பட வேண்டிய பெண் கூட சில நேரங்களில் சூப்பர் ஹீரோ ஆகலாம் என்று உணர்வது தான் பெண்ணியம்.

ஒருவர் குறையை இன்னொருவர் தீர்த்து ஒருவர் பாரத்தை மற்றவர் சுமக்க கற்றுக் கொள்ளும் போது தான் நம் சமுதாயம் மலர தொடங்கும்.

பகலும் இருவும்

இனிப்பும் கசப்பும்

இன்பமும் துன்பமும்

வெயிலும் பணியும்

சூரியனும் சந்திரனும்

ஆணும் பெண்ணும்

ஒன்றில்லாமல் மற்றொன்டிற்கு மதிப்பில்லை

முற்றும்

கதாசிரியரிடம் இருந்து,

என்ன நண்பர்களே, எல்லாரும் சவுக்கியமா? தடுப்பூசி எல்லாம் போட்டாச்சா? போடலனா சீக்கிரம் போய் போட்டுடுங்க 🙂

உங்க எல்லோரிடமும் இப்படி ஒரு பேருந்து கதை நிச்சயம் இருக்கும். உங்க கதைய கமெண்ட்ஸ்ல சொல்லுங்க. கேட்க ஆவலாக இருக்கிறேன்.

இது போன்ற கதைகளை படிக்க இந்த தொகுப்பு பட்டனை கிளிக் செய்யுங்க.

அடுத்த முறை சந்திப்போம்!

Posted in சிறுகதை, தமிழ், History, inspirational, modern, New, short story, tamil

வேண்டாம் என்றானே!

தென்னிந்தியாவின் நடுமையத்தில் ரம்மியமாய் அமைந்திருந்த விருதுநகர் என்னும் ஊரில் சிறுவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். தெளிந்த வானத்தை போன்று எளிமையானவன் அவன். பொன்னோ பொருளோ ஏதும்இன்றி சாதாரண சிறுவனாய் சுற்றி வந்தான். அவனிடம் சூப்பர் ஹீரோ சக்திகளோ கின்னஸ் புத்தகத்தில் இடம் பெரும் அளவிற்கு திறமைகளோ இருந்ததில்லை. ஆனால் நம் எல்லோரிடமும் இல்லாத ஒரு அற்புத குணம் அவனிடம் இருந்தது. “வேண்டாம் என்று கூறும் தைரியம் அவனுக்கு இருந்தது”. இதில் என்ன பெரிய அதிசயம்? என்று நீங்கள் கேட்கலாம். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், இந்த உலகம் என்ன நினைக்கும் என்று ஒவ்வொரு நொடியும் யோசிக்கும் நம்மை போன்ற மனிதர்கள் மத்தியில் இதை எல்லாம் சிறிதும் கண்டு கொள்ளமல் தன் மனம் போன போக்கை பின் தொடரும் மிக பெரிய தைரியம் அந்த சிறுவனுக்கு இருந்தது. அவனின் இந்த தைரியம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தது. அவர்களின் கனவுகள் நினைவாக வழி வகை செய்தது. அவ்வளவு பெரிய மனிதனாய் மாறினான் இந்த சிறுவன். இந்த அற்புத சிறுவனின் கதையை சொல்லட்டுமா?


தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம்

அந்த சிறுவனுக்கு 6 வையதிருக்கும் போது மரணம் அவன் வீட்டிற்குள் நுழைந்து அவன் தந்தையை தன்னுடன் கூட்டி சென்றது. அன்றைய தினம் அவன் தன் வாழ்வின் மிக பெரிய முடிவொன்றை எடுத்தான். கல்வி வேண்டாம் என்றான். தன் பள்ளி நினைவுகளை எல்லாம் மூட்டை கட்டி விட்டு, தன்னை நெருக்கி கொண்டிருந்த வறுமையை எதிர்த்து போராட ஆரம்பித்தான்.

காலங்கள் உருண்டோடியது. அந்த சிறுவன் மதிப்பு மிக்க இளைஞனாய் வளர்ந்தான். தனது தந்தையின் மளிகை வியாபாரத்தின் மூலம் தன் தாயையும் தங்கையையும் கவனித்துக் கொண்டான். முன்று வேலை உணவு, இருக்க நல்ல வீடு – வாழ்க்கை அவன் எதிர்பார்த்ததை விட நன்றாக மாறியது. “கல்யாணம் பண்ணிக்கோடா ராசா. என் கண்ணு குளிர பாக்க வேண்டாமா” ஒவ்வொரு இரவும் அவன் தாய் கெஞ்சினாள். ஆனால்  

அவனுக்கோ விண்ணை தொட ஆசை. அந்த குட்டி கிராமத்தில் தன் வாழ்வை முடித்துக் கொள்ள அவன் விரும்ப வில்லை. அவனது பதினெட்டாம் வயதில் யாருமே எதிர்பார்த்திராதா, நம்மில் பெரும்பாலானோர் செய்ய துணியாத ஒன்றை செய்தான். அவன் தனது குடும்பம், தொழில், எங்கோ காத்திருந்த முறைப்பெண் என தன்னை கட்டி வைத்திருந்த பாரங்களுக்கெல்லாம் ஒரு முற்றுபுள்ளி வைத்து விட்டு இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்க இந்திய தேசிய காங்கிரஸில் நுழைந்தான்.

அவன் செய்தது சரியா? தவறா? யாருக்கும் தெரியும். ஒரு வேலை தவறான முடிவாக கூட இருக்கலாம். ஆனால் அந்த குட்டி கிராமத்தின் எல்லைக்குள் தன் வாழ்க்கை முடிந்து விடுமோ என்ற பயம், விடை தெரியாத இந்த விடுதலை போராட்டத்தில் அவனை உந்தியது. தெருக்களிலும் வீதிகளிலும் சுதந்திர சுடரை பரப்ப ஆரம்பித்தான். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக ஏராளமான போராட்டங்களில் பங்கேற்றான். பல முறை கைது செய்யப்பட்டு சிறைக்கும் சென்றான் அந்த இளைஞன்.

அவனது 2௦ வருட கடின உழைப்பிற்க்காண பலன் ஒருநாள் அவன் வீடு தேடி வந்தது. கவுன்சிலர் என்னும் பதவியை அவனிடம் நீட்டியது. மாதா மாதம் தவறாமல் சம்பளம், கவுன்சிலர் என்னும் பட்டம், அதனோடு சேர்ந்த அதிகாரம். தெரு தெருவாய் சுற்றி வந்த அவனுக்கு ஒரு நிலையான பாதையாய் அமைந்தது அந்த பதவி. வயதாகி கொண்டே சென்ற அவனுக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பு. எந்த ஒரு புத்திசாலி மனிதனும் மகிழ்ச்சியுடன் அதனை ஏற்று கொண்டிருப்பான். ஆனால் அவனோ இந்த பதவி தனக்கு வேண்டாம் என்றான். “பதவிக்காக வேலை செய்பவன் நான் இல்லை. என் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். அது தான் என் குறிக்கோள். அதற்க்கு உதவாத எந்த பதவியும் எனக்கு தேவை இல்லை” என்று தைரியமாக கூறினான் அவன்.

உலகம் அவனை பைத்தியம் என்று எள்ளியது. அவனோ தன் கண்களுக்கு மட்டுமே புலப்பட்ட தன் கனவை நோக்கி நடந்தான்.  

அவனது ஐம்பதாம் வயதில் தன் வாழ்வில் மிக பெரிய மையில்கல்லை அவன் எட்டினான். தமிழ்நாட்டின் முதல்வராக அவன் தேர்ந்தெடுக்கப்பட்டான். அவனது அமைச்சரவையை தேர்வு செய்ய வேண்டிய நேரம் வந்தது. “எப்பவும் போல நம்ம கட்சில இருந்தே அமைச்சர்கள தேர்ந்தெடுத்து இலாகா ஒதுக்கணும் தலைவரே” கட்சி நிர்வாகம் அவனிடம் கூறியது. ஆனால் எப்பவும் போல அவன் தன்கென்று தேர்ந்தெடுத்த தனி வழியில் செயல்பட்டான். தன்னை எதிர்த்து போட்டியிட்ட சட்ட மேதையான சுப்பிரமணியனை தனது நிதி அமைச்சராக நியமித்தான். அவன் முடிவுக்கு பல எதிர்ப்புகள் எழுந்தன. “ஒருவர் குறைகளை இன்னொருவர் நிறைவு செய்து ஒன்றாய் செயல் பட வேண்டியா அமைச்சரவையில் படிப்பறிவில்லாத என் குறைகளை தீர்க்க சுப்பிரமணியனை போன்றதொரு படித்த மேதை நிச்சயம் தேவை” என்று புன்னகை சேர்ந்த துணிவுடன் கூறினான்.

“கருவூலம் காலி தலைவரே. அரசு பள்ளிகளை நடத்த கூட காசு இல்ல”, தமிழகத்தின் முதல்வராய் அவன் கேட்ட முதல் வார்த்தைகள் இவை.

குலகல்வி திட்டம் – பள்ளி இயங்கும் நேரத்தை 6 மணி நேரத்தில் இருந்த 3 மணி நேரமாக குறைபதன் மூலம் இப்போது இருக்கும் ஆசிரியர்களை கொண்டே இரு மடங்கு மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் திட்டம். “குழந்தைகள் தங்கள் குடும்ப வர்த்தகத்தை ஓய்வு நேரத்தில் கற்றுக்கொள்ளலாம். ஒரு குயவனின் மகன் குயவன் ஆகட்டும், வணிகனின் மகன் வணிகம் கற்றுக் கொள்ளட்டும். நாம் இருக்கும் நிலைமையில் இதை தான் நம்மால் செய்ய முடியும். நெருக்கடி காலங்களில் முழுமையான கல்வி சாத்தியமில்லை” அவன் அமைச்சர்கள் முன்மொழிந்தனர்.

ஆனால் அவனோ “குலகல்வி திட்டமாவது மண்ணாவது. இந்த மாதிரி அறை குறை திட்டம் எல்லாம் தமிழ் நாட்டுக்கு வேண்டாம். என் மக்களுக்கு தரமான சமமான கல்விய நானே தருவேன்” என்று சவால் விட்டான்.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு முதலமைச்சர் வீடு வீடாக சென்று தன் மக்களுக்காக நிதி திரட்டினார். அவமானமும் கேலி பேச்சும் அவனை பின் தொடர்ந்தது. சிலர் அவனை எள்ளினார். சிலர் அவனை முட்டாள் என்றனர். ஆனால் நல்ல மனிதர்கள் சிலர் அவன் செயலை பாராட்டினர். தங்களால் முடிந்த வரை உதவி செய்தனர். இதன் மூலம் பிறந்தது தான் மாநில கல்வி தொண்டு இயக்கம்.

இவ்வியக்கத்தின் மூலம் திரட்டிய நிதியால் மாநிலம் முழுவதும் பல புதிய பள்ளிகள் திறக்கப்பட்டன. பழைய பள்ளிகள் சீர் செய்யப்பட்டன.

ஆனால் இதையெல்லாம் தாண்டி முதல் முறையாக மதிய உணவு திட்டம் அணைத்து பள்ளிகளிலும் தொடங்கப்பட்டன. “ஒரு முறை என் பயணத்தின் போது மாடு மேய்ச்சிட்டு இருந்த சிறுவன் ஒருவன பார்த்தேன். ஏன் டா தம்பி, பள்ளி கூடத்துக்கு போகலையானு கேட்டபோ அந்த சிறுவன் சொன்னான் – ஐயா பள்ளிக்கு போன மூளைக்கு சோறு கிடைக்கும் ஆனா வைத்துக்கு? பசி முக்கியமா பள்ளி முக்கியமானா பசி தான ஐயா முக்கியம் அப்படின்னு சொன்னான் அந்த சிறுவன். அன்னைக்கு முடிவு செஞ்சேன். பள்ளிக்கூடம் மூளைக்கு மட்டும் இல்ல வயித்துக்கும் உணவளிக்கணும் அப்படின்னு. அதன் மூலம் பிறந்தது தான் இந்த மதிய உணவு திட்டம்” என்று மேடைகளில் முழக்கமிட்டான் அவன்.

இத்திட்டத்திற்கு பொது மக்கள், பிற மாநில அரசுகள், பத்திரிகைகள் என எல்லோரிடமும் இருந்து பாராட்டுகளும் ஆதரவும் குவிந்தது. பள்ளிகளில் சேர மாணவர்களுக்கு பெரும் ஊக்கமாக மாறியது. சாதி வேறுபாட்டை களையவும் கல்வி புரட்சியை தொடங்கவும் வழி வகை செய்தது

அவனின் முயற்சிகளின் மூலம் கிட்ட தட்ட 80,000 மில்லியன் ரூபாய் தன்னார்வ நன்கொடைகள் மூலம் திரட்டப்பட்டது. 2,00,000 மாணவர்கள் புதிதாக பள்ளிகளில் சேர்ந்தனர். 15,000 க்கும் மேற்பட்ட பள்ளிகள் மாநிலம் முழுவதும் கட்டப்பட்டன.

உலகமே முடியாது என்று கூறிய போதும் அதையெல்லாம் ஓரம் கட்டி விட்டு தன் முயற்சியினால் தான் சொன்ன சொல்லை நிறைவேற்றி முடித்தான் நம் ஹீரோ.

இன்றும் கூட லட்சகணக்கான மாணவர்களின் அறிவு பசியையும் வயிற்று பசியையும் ஆற்றும் உறைவிடமாய் தமிழக பள்ளிகள் அமைவதற்கு அவன் தான் காரணம். விண்ணை தாண்டி பறப்பதற்கு அவர்களுக்கு சிறகளித்தவன் அவன் தான். இன்று தமிழர்கள் பல பன்னாட்டு நிறுவனங்களில் தலைவர்களாய் இருப்பதற்கும் உலகின் எல்லா நாடுகளிலும் கோடி கட்டி பறப்பதற்கும் அவனும் ஒரு காரணம். இந்த கதையை எழுதும் நானும் கூட அவன் திறந்த பள்ளிகளில் ஒன்றில் படித்தவன் தான்.

நம் ஹீரோவின் ஆட்சியில் தமிழ்நாடு பொருளாதாரத்தில் செழித்தது. பல தொழில்துறை பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. அணைகள் மூலம் நீர் பாசன வசதி செய்யப்பட்டு விவசாயம் செழிக்க வழி வகை செய்யப்பட்டது. தமிழ்நாடு அவனின் 9 வருட பொற்கால ஆட்சியில் மலர்ந்தது.

ஆனால் இந்த வசந்த காலம் நீண்ட நாள் நிலைக்கவில்லை.

“முதல்வர் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டார்” என்ற அதிர்ச்சி செய்தி மூளை முடுக்கெல்லாம் பரவியது. “முதல்வர் ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தாரு?” தெருக்கள் தோரும் மக்கள் குழம்பி நின்றனர்.

“பொருளாதார வளர்ச்சி, மக்கள் முன்னேற்றம் என ஒரு பக்கம் மகிழ்ச்சி சூழ்ந்து இருக்க மறு பக்கத்திலோ என்னை வளர்த்த என் கட்சி – இந்திய தேசிய காங்கிரஸ் நோயுற்று கிடக்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டிருக்கிறாள். எனக்கிருக்கும் இந்த பெயர் புகழ் பதவி எல்லாம் அவள் தந்தது. இப்படி இருக்க அவள் நிலையை கண்டும் காணாமல் என்னால் எப்படி இருக்க முடியும்? அவளை மீட்டெடுக்க வேண்டியது என் கடமை. . ஐ.என்.சி யின் தலைவர்களே கேளுங்கள்! உங்கள் பதவிகளை தூக்கி எறிந்து விட்டு ஐ.என்.சி யின் வேர்களை வலுப்படுத்த முன் வாருங்கள். ஐ.என்.சி பதவி பித்து பிடித்தவர்களால் அல்ல, இந்த நாட்டை நேசிக்கும் மனிதர்களால் ஆனது என்று இந்த உலகிற்கு நிருபியுங்கள்” ஆணித்தரமாய் கூறினான்.

சொன்னவாறே தன் சிங்காசனம் வேண்டாம் என்று உதறி தள்ளி விட்டு கட்சியை வலுபடுத்த தொடங்கினான்.   

பதவியை அவன் விட்டாலும் பதவி அவனை விட்டபாடில்லை. இந்தியாவின் மிக பெரிய சிம்மாசனம் அவனுக்காக காத்திருந்தது. பிரதமர் என்னும் பட்டம் – அவன் வீடு தேடி நின்றது. ஆம், 196௦ களில் நடந்த தேர்தலில் அவன் பிரதமர் பதவியில் போட்டியிட்டு வெற்றிபெறுவான் என்று உலகமே எதிர்பார்த்திருந்தது. ஆனால் என் ஹீரோவோ இதற்கெல்லாம் மயங்கவில்லை. “பதவியும் வேண்டாம் புகழும் வேண்டாம்” என்று ஆணித்தரமாக கூறினான்.

மற்றவர்களுக்கு உதவுவதையும் அவர்கள் புன்னகைக்கு காரணமாய் மாறுவதையும் தன் வாழ்கையின் இலட்சியமாக்கிக் கொண்டான். தனது பெரும் முயற்சியின் மூலம் இந்திரா காந்தியையும் லால் பகதூர் சாஷ்திரியையும் சுதந்திர இந்தியாவின் அடுத்தடுத்த பிரதமர்களாக பதவி வகுக்க உதவினான்.

அவரன் முதல்வராக இருந்த காலத்தில், விருதுநகர் நகராட்சி அவனது வீட்டிற்கு நேரடி நீர் இணைப்பை வழங்கியபோது, ​​அத்தகைய சிறப்பு சலுகைகள் எல்லாம் தனக்கு வேண்டாம் என்று ஏற்க மறுத்துவிட்டான்.

முதலமைச்சராக தனக்கு வழங்கப்பட்ட இசட்-லெவல் பாதுகாப்பைப் பயன்படுத்த மறுத்தான். அதற்கு பதிலாக ஒரே ஒரு போலீஸ் ரோந்து வாகனத்துடன் பயணம் செய்தான். அவன் இறுதிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை, சொத்துக்கள் ஏதும் சேர்க்கவில்லை, அதிகாரத்திற்கு அடிமையாக வில்லை, ஒரு ரூபாய் கூட லஞ்சம் பெற்றதில்லை. அவன் இறந்தபோது, 130 ரூபாய் பணம், 2 ஜோடி செருப்பு, 4 சட்டை, 4 வேட்டி மட்டுமே அவன் உடைமையாக இருந்தது.

தனது கடைசி மூச்சு வரை, அநீதியையும் வறுமையையும் சமூகத்தை விட்டு அகற்ற போராடினான். யாருமே எதிர்பார்த்திராத உயரங்களையும் அடைந்தான்.

பணம், பெயர், புகழ், பதவி இவை எல்லாம் அவன் வாசலில் காத்துக் கிடந்த போதும் இவை ஏதும் வேண்டாம் என்று கூறி மக்களுக்கு நல்லது செய்வதை தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டான். அதை சாதித்தும் காட்டினான்.

வேண்டாம் என்று சொன்னானே அவன்.

அவன் வெறும் யாரும் இல்லை – கல்வி கண் திறந்த வள்ளல், கருப்பு சிங்கம், படிக்க மேதை, ஏழைகளின் தலைவன், கர்மவீரன் காமராசனே!

கர்மவீரர் காமராசர்

மதிய உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு உணவு வழங்கும் காமராசர்

சில நேரங்களில் நம் ஹீரோவை போல

வேண்டாம் என்று சொல்ல துணிவோமே!

வாய்ப்புகளை இருக்க பிடித்துக் கொள்

சலுகைகளை இருக்க கட்டிக் கொள்

இப்படி ஒரு வாய்ப்பு மீண்டும் கிடைக்காது

இப்படி ஒரு சலுகை பூமியிலே இல்லை

இந்த உலகம் உன்னிடம் கூறினாலும்

இது நமக்கு ஏற்றதா? என் வளர்ச்சிக்கு உதவுமா?

என் சந்தோஷத்திற்கு வழி வகுக்குமா?

என்று ஒரு முறை சிந்தித்துக் கொள் நண்பா

நீ வேண்டும் என்று ஏற்கும் ஒவ்வொரு முறையும்

மற்ற எல்லா வாய்ப்புகளையும் உனக்கே தெரியாமல் வேண்டாம் என்று உதறி தள்ளுகிறாய்

வேண்டும் வேண்டும் என்ற பித்தில் திரியும் இவ்வுலகில்

வேண்டாம் என்று கூறவும் கற்றுக் கொள்!

வணக்கம்

கதாசிரியரிடம் இருந்து,

என்ன நண்பர்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க? சாப்பிட்டாச்சா? கொரோனா லாக் டவுன்லாம் எப்படி இருக்கு?

கதை கொஞ்சம் கால தாமதமாகி விட்டது. அடியேனை மன்னித்து விடுங்கள்.

கதை எப்படி இருக்கு? எல்லாத்துக்கும் ஆமாம் ஆமாம் சொல்லி பழகிய நமக்கு வேண்டாம்னு சொல்றது கஷ்டம் தான்.

கொஞ்சம் கொஞ்சமா கத்துப்போமே? சரியா?

இது போன்ற கதைகளை படிக்க இந்த தொகுப்பு பட்டனை கிளிக் செய்யுங்க.

மீண்டும் சந்திப்போம் 🙂

Posted in சிறுகதை, தமிழ், happyending, inspirational, modern, short story, tamil

மாறும் பருவங்கள்

மாற்றம் என்ன அவ்வளவு முக்கியமா?

வழக்கமான வாழ்க்கையில் இன்பத்தையும் ஆறுதலையும் காணும் வித்தியாசமான மனிதர்களில் நானும் ஒருத்தி. அறிமுகமானவர்களின் முகத்தை காண்பதிலும் நன்கு பழக்கப்பட்ட வீதிகளிலும் ஆறுதல் அடையும் மனுஷி நான்.

மாற்றத்தை கண்டு அஞ்சும் ஒருத்தி.

“என்னை போன்றவரா நீங்கள்?”

எனக்கு பரிச்சயம் பிடிக்கும். அதே வழக்கமான காலை, அதே பால்காரனின் குரல், வானொலியில் அதே பழைய பாடல், என் அண்டை வீட்டுக்காரர்களின்  அதே குறட்டை சத்தம், எனக்காக நான் உருவாக்கிய இந்த சின்ன உலகில் சந்தோஷமாய் வளம் வந்தவள் நான்.

ஆனால் ஏன்? என் கணினித் திரையில் ஒளிரும் சொற்களைக் கண்டு குமுறினேன்.

“திருமதி கேட்டி தாம்சன்,

எங்கள் நிறுவனமான செயின்ட் இன்கில்., 36 வருடங்கள் இடை விடாது பணியாற்றி, எங்கள் வளர்ச்சிக்கு உதவிய உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நீங்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும், எங்கள் நிறுவனத்தின் வாயில்கள் உங்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கும்

உங்கள் ஓய்வு காலத்தை மகிழ்ச்சியுடன் செலவழிக்க உங்களை வாழ்த்துகிறோம்.

அன்புடன்,

செயிண்ட் இன்க்.,

எனது நிறுவனத்தில் நான் செலவிட்ட அந்த மணி துளிகள், அதின்  அறைகளுக்கிடையே  ஒளிந்திருந்த பழக்கப்பட்ட முகங்கள், ஒளிரும் திரைகளும் – என் வாழ்நாளின் மிக பெரிய பாகங்கள்.

36 வருடமாய் நான் சிற்பமாய் செதுக்கிய என் வாழ்க்கை ஒரே நாளில் தலை கீழாய் மாறி போனது,

♫ லா லா லலலலா ♫ என் தொலைபேசியின் குரலைக் கேட்டு புன்னகைத்தேன். 10 ஆண்டுகளாக என் ரிங்டோன் கூட மாறவில்லை.

“அம்மா, அடுத்த வாரம் உங்களுக்கு பிளைட்(விமானம்). சின்ன குழந்தை மாதிரி அடம்பிடிக்கம சீக்கிரம் பேக்கிங் செய்ய ஆரம்பிங்க”    

என் அன்பு மகனின் குரல். நான் அறியாத மொழி பேசும், நான் அறியாத மனிதர்கள் வாழும், நான் அறியாத அந்த நாட்டிற்கு வர அழைப்பு விடுத்தது.

எனது மிக பெரிய பயத்தை நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது – மாற்றம்.

என் போராட்டம் வெற்றி பெறுமா? அந்த ஒரு கேள்விக்கு மட்டும் விடை எங்குமே கிடைக்கவில்லை.

எனது மொத்த வாழ்க்கையையும் அந்த சிறிய பழுப்புப் பெட்டிகளில் அடைக்கத் தொடங்கியபோது தான், ​​எனது மதிப்புமிக்க உடைமைகளில் பெரும்பாலானவை பல முறை படித்த தேய்ந்த புத்தகங்களும், குப்பைகளாய் தோன்றிய டிரிங்கெட்டுகளுமே எனப் புரிந்தது. ஆனால் என் மங்கின கண்களுக்கு தான் தெரியும் அதில் ஒளிந்திருக்கும் அற்புத நினைவுகள் – என் வாழ்க்கையின் புதையல்கள்.

ஆச்சரியப்படும் விதமாக, தூசி படிந்த அந்தக் குவியல்களுக்கு அடியில் ஒரு மகத்தான புதையல் வெளிவந்தது, என் பழைய டைரி, அதற்க்கு கிட்ட தட்ட என் வயது. ஹாஹா.

படிந்திருந்த தூசியை உதறிவிட்டு, என் படுக்கையின் அரவணைப்பில் என் கடந்த காலத்திற்குள் பயணிக்க தயாரானேன்.  

அன்புள்ள டயரி

எனக்கு குழந்தைகளை பார்த்தாலே வெறுப்பா வருது.

ஒரே நேரத்தில எப்படி தான் அழுதுகிட்டு, கத்திக்கிட்டு, கூச்சல்போட்டுகிட்டே அதுங்களால ஓட முடியுதோ!

பக்கத்து வீட்டு ஜெனி பாப்பா இருக்காளே, அம்மா அவள பார்த்துக்க சொன்னங்க. அவ என்னனா தட்டை உடைச்சிட்டா, சுவற்றிலே கிறுக்கி வச்சிட்டா, என் பொம்மைய கிழிச்சிட்டா. என்னையே அழ வச்சிட்டா.

நான் வளர்ந்து பெருசானதும் குழந்தைகள கிட்டயே சேர்க்க மாட்டேன்.  

என் மேசையை அலங்கரித்த படம் என் கண்களில் பட்டது. என் 5 வயது மகனை நான் தூக்கிக் கொண்டுடிருக்கும் படம் அது. என் முகத்தில் அப்படி ஒரு புன்னகை. லாட்டரி வென்ற மனிதனை விட, உலகின் முதல் பணக்காரனை விட மகிழ்ச்சியான ஒரு புன்னகை.

என் செல்ல மகன் எப்படியோ என் வாழ்க்கையின் வெளிச்சமாய் மாறி போனான்.

அன்புள்ள டயரி

இந்த வயசானவங்கலாம் எப்படி தான் இந்த காபியை குடிக்கிறாங்களோ?

சுட சுட கசப்பா இருக்கு. அதை போய் காசு குடுத்து வாங்கி குடிக்கிறாங்க.

நான் வளர்ந்து பெருசானதும் இந்த காப்பிய உதறி தள்ளிட்டு தினமும் ஒரு ஐஸ்கிரீம் வாங்க போறேன்.

என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. என்னை சுற்றிக் கிடந்த காபி டம்பளர்கள் என்னை காட்டிக் கொடுத்தன. அதோடு ஒரு நாள் கூட எனக்கு நானே ஐஸ்கிரீம் வாங்கியதாக நினைவே இல்லை. ஹாஹா.

அன்புள்ள டயரி,

எப்படி மத்தவங்க கிட்ட பேசுறது. கொஞ்சம் சொல்லிதாயேன்.

மத்தவங்கள பார்த்ததும் கை எல்லாம் வேர்க்குது, நெஞ்சு பட படக்குது. வாய் ஒன்னா ஒட்டிக்கிட்டு வார்த்தை வெளிய வரமாட்டிங்கிது

இன்னைக்கு முதல் நாள் கல்லூரியிலே நான் கிட்டத்தட்ட அழுதுட்டேன் தெரியுமா.

இப்படியே போன எனக்கு நண்பர்களே கிடைக்கமாட்டங்க போல. நான் தனி மரமா சுத்த வேண்டியது தான்.

பேச பயந்த நான் எப்படியோ வாயை மூடவே மூடத மூதாட்டியாய் மாறி போனேன். நான் சொன்னால் நம்பமாட்டீர்கள். என் தெருவில் உள்ள டீகடைக்காரர், பால்க்காரர், பேப்பர் போடுபவர், போக்குவரத்து காவலாளி, என் தெருவில் வசிக்கும் 20 குடும்பங்கள் என எல்லோரும் எனக்கு நண்பர்கள்.  

அன்புள்ள டயரி,

உனக்கு கிருஷ்யை நினைவிருக்கா?

அதான் வேதியல் ஆய்வகத்துல என் கூட்டாளி..

என் தைரியத்தை எல்லாம் திரட்டி காதலர் தினத்துல என் காதல அவன்கிட்ட சொல்லலாம்னு போனேன். அப்போ அவன் நண்பர்களோட பேசிட்டு இருந்தத ஒட்டு கேட்டேன்.

“ஏய் கிருஷ், என்ன எப்போ பார்த்தாலும் கேட்டி கூடவே சுத்திகிட்டு இருக்கே? சரி இல்லையே…. என்ன காதலா?”  அவன் நண்பன்ல ஒருத்தன் கேட்டான்.

“கேட்டியா? காதலா? அவ முகத்தை பார்த்தாலே எவனா இருந்தாலும் தலை தெருச்சி ஓடிடுவான். அப்படி இருக்க அவளை போய் நானா.. வாய்ப்பே இல்லை.

நான் கொஞ்ச சிரிச்சி பேசுனதுனாலே என் வேலையையும் ஹோம்வர்க்கையும் (வீட்டு பாடத்தையும்) அவளே எழுதி முடிச்சிட்டா. முட்டாள் பொண்ணு. ஈசியா ஏமாற்றலாம்” சிரித்துக் கொண்டே கூறினான் கிருஷ்.

அந்த முட்டாள்… படுபாவி … நான் அவனைக் கொல்ல போறேன்.

ஆனா அவன் சொல்றதும் சரி தான். என்னை யாருக்கும் பிடிக்காது.

அந்த நாள் நன்றாக நினைவில் இருக்கிறது. எப்படி மறக்க முடியும். இரவு முழுவதும் கண்ணீரில் அல்லவா கழித்தேன்.

ஆனால் காதல் என்னை கட்டி அணைத்தது, நான் ஜேசனை கண்ட அந்த நாளில். ஜேசனை – என் காதல் கணவன், என் இளவரசன். அவரோடு நான் கழித்த 25 ஆண்டு திருமண வாழ்க்கை சொர்க்கமாய் தோன்றியது.  

என் ஜேசன் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகத்தை விட்டு மறைந்து போனான்.

தேய்ந்த அந்த பக்கங்களுக்குள், அந்தக் கதைகளுக்குள், மனித பார்வையில் மறைந்திருந்த ஒரு உண்மையை நான் உணர்ந்தேன்.

என்னையே அறியாமல் என் வாழ்க்கை மாறிவிட்டது

கேட்டியாகிய நான்

குழந்தைகளை வெறுக்கும் ஆறு வயது சிறுமியும் இல்லை

காபியை வெறுத்த பெதும்பையும் இல்லை

கூச்சத்தில் தலை குனிந்த மாணவியும் இல்லை

காதல் தோல்வியில் கண்ணீர் விட்ட மங்கையும் இல்லை

என் மிக பெரிய எதிரியான மற்றம் எப்படியோ இத்தனை நாட்களாய் என் உற்ற நண்பனாய் எனக்கே தெரியாமல் என்னோடு வந்துள்ளான்.

இதை எல்லாம் உணர்ந்த பிறகு – புது நாடு, புது மொழி, புது முகங்கள், அந்த மாற்றமும் நன்றாக தான் இருக்கும் என தோன்றுகிறது.

நிறம் மாறும் பருவங்களே

திசை மாறும் நினைவுகளே

நிலை மாறும் மேகங்களே

உலகம் சொல்ல மறுக்கும் உண்மையை சொல்லட்டுமா?

மாற்றத்தை கண்டு அஞ்சும் மனித இனம்

தன்னையே அறியாமல்

மாறும் பருவங்களை கட்டி அனைக்கிறது.

முற்றும்

கதாசிரியரிடம் இருந்து,

அன்பு வாசகர்களே,

கதை எப்படி இருக்கு?

எல்லாரும் நல்ல இருக்கீங்கனு நம்புறேன் 🙂

கதை பிடிச்சிருந்த ஷேர் பண்ணுங்க , பாலோ பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க

இந்த எழுத்தாளனுக்கு உங்க அன்ப தெரிவீங்க.

அடுத்த கதை 14.2.2021 அன்று ஞாயிறு 0.00 ist மணிக்கு வெளியாகும்.

மறக்காம படிங்க.

இது போன்ற கதைகளை படிக்க இந்த தொகுப்பு பட்டனை கிளிக் செய்யுங்க.

அடுத்த வாரம் சந்திப்போம் நண்பர்களே!

Posted in சிறுகதை, தமிழ், fairytale, fiction, happyending, History, inspirational, short story, tamil

நிறைவான குறைவு – பாகம் II

முடிவே இல்லாத அந்த நரகம் இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தது. அதன் மிக பெரிய வாயில்கள் திறந்தன. நட்சத்திரங்களை போன்ற பிரகாசமான புன்னகையுடன் உள்ளே நுழைந்தார் மாஸ்டர். “இது என்ன கனவா? இல்ல சொர்கமா?” குழம்பி நின்றான் ரிக்கு. இந்த நரகத்தில் இருந்து தப்பிப்போம் என்ற நம்பிக்கை துளி கூட இல்லை அவனுக்கு.

மாஸ்டர் ரிக்குவை தன் வீட்டிற்கு அழைத்து வந்தார். தனது விலை உயர்ந்த பொக்கிஷங்களின் நடுவில் அமைந்திருந்த வெல்வெட் படுக்கையில் அவனை மென்மையாய் வைத்தார். அருகில் இருந்த கண்ணாடியில் தனது பிரதிபலிப்பைப் பார்த்து ஆச்சிரியத்தில் திகைத்து நின்றான் ரிக்கு.

வைரம் போன்று ஒளிரும் அவன் உடல், வசந்தத்தின் வாசத்திற்கு உயிர் கொடுத்த மலர்களின் இனம் புரியாத ஓவியம், உலக அழகிகள் கூட பொறாமை பட கூடிய அற்புத வளைவுகள் – மாஸ்டரின் தலை சிறந்த படைப்பாய் மாறி இருந்தான் ரிக்கு.

ரிக்குவின் கண்களில் முதன் முதலாய் ஆனந்த கண்ணீர் நடனமாடியது. “என்ன மன்னிச்சிடுங்க மாஸ்டர். நான் உங்கள நம்பி இருக்கணும். நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். என்ன மன்னிச்சிடுங்க” குற்ற உணர்ச்சியில் குமுறினான் ரிக்கு.

 “கவலைபடாதே செல்ல ரிக்கு, நீ என் மேல நம்பிக்கை வைக்காம இருந்திருக்கலாம். ஆனா நான் உன் மேல வச்சிருந்த நம்பிக்கை ஒரு துளி கூட குறையல. ஒரு நாள் நீ என்னோட தலை சிறந்த படைப்பா மாறுவனு எனக்கு நல்ல தெரியும் ரிக்கு” எப்போதும் போல தனது எல்லாம் அறிந்த புன்னகையுடன் கூறினார் மாஸ்டர்.

“நான் இன்னைக்கு முடிவெடுத்துட்டேன். இனிமேல் என் வாழ்க்கையில என்ன வந்தாலும், யார் மறந்தாலும், சாவே வந்தாலும் நான் உங்க மேல இருக்க என் நம்பிக்கைய விடவே மாட்டேன்,” கண்களில் பெரும் நம்பிக்கையுடன் கூறினான் ரிக்கு.

“பார்ப்போம்” என்றார் மாஸ்டர் சிரித்தப்படி.  

நாட்கள் உருண்டோடின. மாஸ்டரின் மிகப்பெரிய புதையலாக தனது மதிப்புமிக்க அந்தஸ்தை அனுபவித்துக்கொண்டிருந்தான் ரிக்கு. அவனது அழகை ரசிக்கவே ஒரு தனி ரசிகர் பட்டாளம் அவனுக்கிருந்தது.

எப்படியோ ரிக்குவின் கனவுகள் நிஜமாய் மாறியது. பல நாட்களின் முடிவில்லா வலிகளை தங்கி கொண்டதற்காக அவன் தன்னை தானே புகழ்ந்துக் கொண்டான். “எப்படியோ கடைசியில என் சொர்கத்தை கண்டுபிடிச்சிட்டேன்” புன்னகையுடன் பெரு மூச்சு  விட்டான் ரிக்கு.

ஆனால் அந்த சந்தோஷாம் நீண்ட நாள் நிலைக்க வில்லை. ரிக்குவின் வாழ்க்கை தலை கீழாய் மாறிய நாள் அது. அவன் தன் மனதில் ஒளித்து வைத்திருந்த பயங்கள் எல்லாம் அவன் கண் முன் உருவெடுத்த நாள் அது.

எப்போதும் போல சூரிய ஒளி அந்த அறையினுள் ஊடுருவ தொடங்கியது. பறவைகளின் ராகங்கள் காற்றை நிரப்பின. தனது வெல்வெட் மெத்தையில் ஆயாசமாய் அமர்ந்திருந்தான் ரிக்கு.

மாஸ்டர் ரிக்குவை தூக்கிக் கொண்டு மீண்டும் தன் பட்டறைக்குள் நுழைந்தார். “என்ன ஆச்சு மாஸ்டர்?” ரிக்குவின் கேள்விக்கு “என் மேல் நம்பிக்கை வை” என்ற வார்த்தைகள் மட்டுமே பதிலாய் கிடைத்தது.

மாஸ்டர் ரிக்குவை ஒரு துணியால் போர்த்தினார். அருகில் இருந்த சுத்தியலை எடுத்து அவர் அடித்த அந்த ஒரே அடியில் சுக்கு நூறாய் நொறுங்கி போனான் ரிக்கு.

அந்த சுத்தியலின் அடியை விட அதை அடித்தவர் மாஸ்டர் என்பது தான் ரிக்குவிற்கு அளுவுக்கடந்த வலியை தந்தது. இம்முறை எந்த கதறலும் அவன் உதடுகளில் தோன்றவில்லை. எந்த வேண்டுதல்களும் எந்த குமுறல்களும் இல்லை.

வெறும் முடிவற்ற கண்ணீரும், வருத்தம், கோபம், வேதனை, வலி என உயிரற்ற அவனது கண்களில் தோன்றிய என்னுக்கடங்காத உணர்ச்சிகள் மட்டுமே.

“கடைசியில நானும் குப்பை தொட்டிக்கு தான் போக போறேன்” தனக்குள் சிந்தித்துக் கொண்டான். “நான் ஒன்னுத்துக்கும் உதவாதவன், உருப்படாதவன், எதுக்கும் லாயக்கில்லாதன், முட்டாள்……….” பைத்தியக்காரனை போல் இதையே முணுமுணுத்துக் கொண்டிருந்தான் ரிக்கு.

ஆனால் மாஸ்டரோ தன் வேலையை தொடங்கினார். சுக்கு நூறாய் கிடந்த அந்த துண்டுகளை ஒன்றோடு ஒன்று ஒட்ட ஆரம்பித்தார். மாஸ்டருக்கே அது மிக கடினமான சவாலாய் இருந்தது. அவர் சேர்க்க நினைப்பது உலகத்தின் மிக கடினமான புதிர் அல்லவா.

ஒவ்வொரு துண்டையும் பொறுமையாய் அதன் சரியான இடத்தில் வைக்க பல மணி நேரங்கள் தேவை பட்டது. அத்துணை நேரமும் மாஸ்டர் புன்னகையுடன் தன் பணியை தொடர்ந்தார்.

ஆனால் இதை ஏதும் பொருட்படுத்தாமல் தன் சோக உலகில் மூழ்கி இருந்தான் ரிக்கு. அவனை போலவே அவன் மாஸ்டரின் மீது அவன் வைத்திருந்த நம்பிக்கையும் அன்பும் சுக்கு நூறாய் உடைந்திருந்தன. மாஸ்டரை வெறுப்புடன் பார்த்தன். “இது மேல நீங்க என்ன செஞ்சாலும் அதனால ஒரு பயனும் இல்ல. பேசாம வேற வேலை ஏதாச்சும் இருந்த போய் பாருங்க” கோபத்தில் கூறினான் ரிக்கு. எப்படியாவது மாஸ்டரை விட்டு எங்கையாவது தூர ஓடி விட வேண்டும் என்று ரிக்குவின் மனம் துடித்தது.

பல இரவுகள் அந்த உடைந்த துண்டுகளுடன் போரடியப்பின் “ஹா! முடிஞ்சிடுச்சி” என்னுக்கடங்கா மகிழ்ச்சியுடன் கூரினார் மாஸ்டர்.

ரிக்குவை மீண்டும் அந்த வெல்வெட் படுக்கையில் வைத்தார். கண்ணாடியில் தனது பிரதிபலிப்பை கண்டு அவன் இதையமே துடிப்பதை மறந்து நின்றது. அந்த அதிசயத்தில் அதிர்ந்து நின்றான் ரிக்கு.

வைரம் போன்ற அவன் முந்தைய உடலில் மிளிரும் தங்க சுவடுகள் அங்கும் இங்கும் படர்ந்து அவனின் வளைவு நெளிவுகளை அலங்கரித்தன – சாதாரண கோப்பையாய் அல்ல, இதோ ராஜாக்களுக்கு ஏற்ற விலையேற பெற்ற படைப்பாய் குட்டி ரிக்கு மாறி இருந்தான்.

“என்ன மன்னிச்சிடுங்க மாஸ்டர். மன்னிப்பு கேட்க கூட எனக்கு தகுதி இல்ல” கண்ணீர் மல்க கூறினான் ரிக்கு.

எப்போதும் போல தனது எல்லாம் அறிந்த அற்புத புன்னகையை அவனுக்கு பரிசாக தந்தார் மாஸ்டர்.

பல நேரங்களில் மிதிக்கப்பட்டும்

பல முறை தவறுகளால் துவண்டு நின்றும்

பல வேளைகளில் கை விடப்பட்டும்

பல சொற்களால் பதம் பார்கப்பட்டும்

பல நொடிகள் தீயில் தவித்தும்

எல்லாம் முடிந்தது என்று பெரும் மூச்சு விடும் நோடியில்

பல நூறு துண்டுகளாய் நொறுங்கி போனாலும்

மாஸ்டர் மீது இருக்கும் நம்பிக்கையை மட்டும் கை விடாதே நண்பா

ஏன் தெரியுமா

வலிகள் நம்மை தயாராக்கும்

தவறுகள் நம்மை தாங்கி பிடிக்கும்

தனிமை நம்மை வலுவாக்கும்

கூர்மை சொற்கள் நம்மை சரி செய்யும்

தீயின் சுடர்கள் நம்மை பிரகாசிக்க செய்யும்

அன்பு நண்பனே

மாஸ்டர் கலைஞர் மீது நம்பிக்கை வை

அவர் கரங்களில்

களிமண்ணும் காவியமாகும்

உடைந்த துண்டுகள் உருபெரும்

பயனற்ற பத்திரமும் மிகச்சிறந்த படைப்பாகும்

குறைவுகள் எல்லாம் நிறைவாகும்

இந்த நொடியில் மாஸ்டர் உங்களையும் தன் தலைசிறந்த படைப்பாய் வனைந்துக் கொண்டிருக்கிறார்.

கிண்ட்சுகுரோய்:

“தங்கத்தால் சரிசெய்ய”

மட்பாண்டங்களை தங்கம் அல்லது வெள்ளி அரக்குகளால் பழுதுபார்க்கும் கலை.

உடைப்புகளும் பழுதுகளும் அந்த பொருளின் வரலாற்றின் ஒரு பகுதியாக கருதி காக்கப்படுகின்றன.

அதன் குறைவுகள் அதனை நிறைவாக்கும், இன்னும்  அழகாக்கும்

வணக்கம்

கதாசிரியரிடம் இருந்து

எப்படி இருக்கீங்க நண்பர்களே,

இந்த புதிய வருடத்தில் உங்கள் ஆசைகள் எல்லாம் நிறைவேற, முயற்சிகள் எல்லாம் கை கூட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஒரு வேலை உங்க சூழ் நிலைகள் எதிர்மறையா இருந்தாலும் மாஸ்டர் மேல இருக்க நம்பிக்கை வையுங்க.

ஏன்னா ரிக்கு மாதிரி நீங்களும் அவரின் மிக சிறந்த படைப்பாய் மாறும் முயற்ச்சியில தான் இருக்கீங்க. 🙂

அடுத்த பாகம் 7 பிப்ரவரி 0.00 மணிக்கு வெளியாகும்.

மறக்காம உங்க கருத்துக்களை கம்மேண்டில் பதிவு செயுங்க. அப்படியே அந்த பாலோ பட்டனையும் தட்டி விடுங்க.

இது போன்ற கதைகளை படிக்க இந்த தொகுப்பு பட்டனை கிளிக் செய்யுங்க.

அடுத்த வாரம் சந்திப்போம் நண்பர்களே!

Posted in சிறுகதை, தமிழ், fairytale, fiction, happyending, History, inspirational, short story, tamil

நிறைவான குறைவு – பாகம் I

பல்லாயிரம் ஆண்டுகளாய், சீனாவின் ஜிங்டெஜென் நகரம் தலைச்சிறந்த பீங்கான் படைப்புகளின் பிறப்பிடமாய் திகழ்கிறது. உலகெங்கிலும் இருந்த  மன்னர்களும் வணிகர்களும் அவற்றை புதையல்களாகக் கருதி, அத்தகைய அற்புதமான படைப்புகளை சொந்தமாக்கி கொள்ள பேராவல் கொண்டிருந்தனர். பெரும் தொகையை செலுத்தவும் தயாராய் இருந்தனர்.

ஜிங்டெஜெனின் இத்துணை பேர் புகழின் ரகசியம் அதன் ஆற்றங்கரையில் காணப்படும் மிகச்சிறந்த சீன களிமண் மற்றும் அதன் கலைஞர்களின் ஒப்பிடமுடியாத கைவண்ணத்தில் ஒளிந்திருந்தது.

ஒருமுறை ஒரு மாஸ்டர் கலைஞர் தனது தலைசிறந்த படைப்பை உருவாக்க ஜிங்டெஜென் நகரத்திற்கு வந்திருந்தார். அவர் வந்த செய்தியைக் கேட்டதும் அங்கிருந்து களிமண் அனைத்தும் பேராவல் கொண்டன. “ நான் தான் எல்லோரையும் விட வலிமையானவன். மாஸ்டர் நிச்சயம் என்னை தான் தேர்ந்தெடுப்பார்” என்று ஒரு களிமண் கூறியது. “இல்லை, இல்லை, நான் தான் இங்கு இருப்பவர்களிலே பிரகாசமானவன். அதனால் மாஸ்டர் நிச்சயம் என்னை தான் தேர்ந்தெடுப்பார்” என்றது மற்றொரு களிமண். “இப்படியே பேசிக் கொண்டே இருங்க. கடைசியில் மாஸ்டர் என்னை தான் தேர்ந்தெடுக்க போகிறார். அவருக்கு என்னை போன்ற மென்மையான களிமண் தான் தேவை” என்று பெருமையுடன் கூறியது மற்றொரு களிமண்.     

ஆனால் கடைசியில், மாஸ்டர் ஆற்றின் நடுவில் கிடந்த சிறிய களிமண்ணான ரிக்குவை தான் தேர்ந்தெடுத்தார். அவன் வலிமையானவனும் இல்லை பிரகாசமானவனும் இல்லை. அவன் மென்மையாகவும் இருந்ததில்லை. அவன் வெள்ளையும் பழுப்பும் கலந்த கலவையாய், எல்லோராலும் கேலி செய்யப்பட்ட ஒரு சாதாரண களிமண். மாஸ்டர் ஏன் அவனை தேர்ந்தெடுத்தார் என்று அவனுக்கு புரிய வில்லை. ஆனால் குட்டி ரிக்கு மாஸ்டர் மீது அளவுக்கடந்த நம்பிக்கை வைத்திருந்ததான்.

மாஸ்டர் ரிக்குவை தனது பட்டறைக்கு அழைத்துச் சென்றார் – படைப்புகள் உயிர்பெரும் மந்திர சாலை அது. பாழும் களிமண்ணும் விலையேற பெற்ற படைப்பை மாறும் அற்புத ஸ்தலம் அது.

முதல் படி சுத்திகரிப்பு.

ரிக்குவை பலமுறை தண்ணீரில் கழுவினார் மாஸ்டர். அவனுக்கு அதிகமாய் மூச்சு திணறியது. எப்படியோ சமாளித்துக் கொண்டான். தண்ணீரில் கழுவியதால் ரிக்கு மென்மையாகவும் பிசுபிசுப்புடனும் மாறி போனான்.

அதற்க்கு பின் மாஸ்டர் அவனை ஒரு தொட்டியில் வைத்து தனது கால்களால் அவன் மீது மிதிக்க தொடங்கினார். “ஐயோ….. அம்மா…. வலிக்குதே…….” கதறினான் ரிக்கு. ஆனால் மாஸ்டர் எதையும் பொருட்படுத்தாமல் தன் வேலையை தொடர்ந்தார். “இதுக்கு தானா என்னை தேர்ந்தேடுதீங்க? ராஜா மாதிரி இருந்த என்னை இப்படி அடிமை போல மிதிக்கிரீங்களே இது எந்த விதத்தில் நியாயம்” புலம்பினான் ரிக்கு. ஆனால் அவனுக்குக் கிடைத்ததெல்லாம் அவனது எஜமானரின் அழகான அமைதியும் அனைத்தும் அறிந்த அற்புத புன்னகையும் தான்.

பின்னர் வடிவம் பெறும் நிலை வந்தது.

மாஸ்டர் ரிக்குவை சுழலும் மேசையில் வைத்தார். ரிக்குவின் உலகம் சுழல ஆரம்பித்தது. சுற்றி சுற்றி மயங்கி போனான் ரிக்கு. மாஸ்டர் பொறுமையுடன் மென்மையாய் களிமண்ணிற்கு தன் விரல்களால் வடிவம் கொடுக்க தொடங்கினார். அந்த களிமண் மீது தன் முழு கவனத்தையும் செலுத்தி, அதை ஒரு தலைசிறந்த படைப்பாக வடிவமைக்கத் தொடங்கினார். ஆனால் ஒவ்வொரு முறையும் ரிக்கு தவறு செய்தான். வடிவம் உரு குலைந்து போனது. ஆனால் மாஸ்டரோ சிறிதும் கோபம் கொள்ளாமல் ஒவ்வொரு முறையும் பொறுமையாய் முழு செயல்முறையையும் மீண்டும் முதலில் இருந்து தொடங்கினார். ரிக்குவின் தவறினால் வடிவம் உருகுலைவதும் மாஸ்டர் மீண்டும் முதலில் இருந்து தொடங்குவதுமாய் – பல மணி நேரம் தொடர்ந்தது.

சிறிது நேராத்தில் ரிக்கு அழ தொடங்கினான். “எதுக்குமே உதவாதவன் நான். எனக்குன்னு எந்த திறமையுமே இல்ல. நான் ஒன்னுத்துக்குமே லாயக்கு இல்ல. பேசாம என்னை விட்டுட்டு வேற யாரையாச்சும் தேர்ந்தெடுத்துக்கோங்க மாஸ்டர். உங்களோட படைப்பாய் மாறுவதற்கு எனக்கு தகுதியே இல்ல. உங்க நேரத்தை என் மேல வீனடிக்கதீங்க” புலம்பி தள்ளினான் ரிக்கு. ஒன்றுக்கும் உதவாதவன் நான் என்று மீண்டும் மீண்டும் தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.

ஆனால் மாஸ்டர் தனது எல்லாம் அறிந்த புன்னகையுடன் “என் மேல் நம்பிக்கை வை” என்று கூறி விட்டு மீண்டும் தன் வேலையை தொடர்ந்தார்.  பல மணிநேர உழைப்பிற்கு பின் மாஸ்டரின் கைகளில் அழகான கோப்பையாய் உருப்பெற்றான் ரிக்கு.

மாஸ்டர் ரிக்குவை வேறொரு அறைக்கு தூக்கிச் சென்று ஜன்னல் அருகே சூரிய ஒளியில் வைத்தார். “என் மேல் நம்பிக்கை வை” மாஸ்டர் மீண்டும் ஒரு முறை கூறி விட்டு அங்கிருந்து சென்றார்.

தனிமையில் தன் மஸ்டருக்காய் காத்திருந்தான் ரிக்கு. பல நாட்கள் சென்ற பின்னும் மாஸ்டர் தென்படவில்லை. அவன் மனதின் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து குழப்பம் ஆட் கொள்ள தொடங்கியது. குழப்பம் பயமாய் மாறி அவன் தன் வாழ்கையே வீண் என்று யோசிக்கும் அளவிற்கு அவனை கொஞ்சம் கொஞ்சமாய் கொன்றது.

“மாஸ்டர் என்னை நிஜமாகவே  கை விட்டு விட்டாரா? நான் கடைசியில எதுக்கும் உதவாதவன் தானா? நான் உயிரோட இருந்து என்ன பயன்? என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமே இல்லாம போய்டுச்சே” தன்னையே குறை கூறிக் கொண்டான் ரிக்கு.

ஏறக்குறைய 15 நாட்கள் காத்திருப்புக்கு பின், மாஸ்டர் பிரகாசமான சூரியனைப் போன்ற தன் புன்னகையுடன் அந்த அறைக்குள் நுழைந்தார். மென்மையாய் ரிக்குவை துக்கிக் கொண்டு மீண்டும் தன் பட்டறைக்கு சென்றார்.

ரிக்கு அப்போது தான் உணர்ந்தான், தனக்குள் நடந்த அந்த மாற்றத்தை.

குழ குழ வென்று வடிவமற்ற களிமண்ணாய் இருந்த ரிக்கு இப்போது வலுவான, உறுதியான, அழகு வடிவத்துடன் உபயோக படுத்தக் கூடிய பாத்திரமாய் மாறி இருந்தான்.

கண்ணீரில் அவன் கழித்த அந்த இரவுகள் அவனை பலமான படைப்பை மாற்றி இருந்தது.

பின்னர் சரி செய்யும் நேரம் வந்தது.

மாஸ்டர் ரிக்குவை மீண்டும் சுழலும் மேசையில் வைத்தார், ரிக்குக்கு அதெல்லாம் பழகி போன ஒன்றாகி விட்டது. ஆனால் இம்முறை, மாஸ்டரின் மென்மையான கைகள் அல்ல, அவரின் கைகளில் இருந்த கூர்மையான பிளேட் அவனை பதம் பார்த்தது. அவனின் கரடுமுரடான விளிம்புகளை மென்மையாக்கி, அடித்தளத்தை தட்டையாக்கினார் மாஸ்டர். ஆனால் பாவம் ரிக்கு, வலியில் துடி துடித்துப் போனான். மாஸ்டரின் பிளேட் அவன் உடலை பதம் பார்த்தது.

மாஸ்டர் நுட்பத்துடன் மணிக்கணக்கில் வேலை செய்தார். அவரின் மாயாஜால கை வண்ணத்தில் ரிக்கு மிக சிறந்த படைப்பை உரு பெற்றான். அவனின் குறைவுகள் எல்லாம் மறைந்த முழுமையான பாத்திரமாய் வடிவம் பெற்றான். இறகு போன்ற மென்மையான உடலும் நாரையின் கழுத்தை போன்ற வளைவும் ஒரு புதையல் போல அவனை உணர செய்தது.

விரைவில் மாஸ்டர் தனது தூரிகையை எடுத்து, தனது தோட்டத்தில் பூத்துக்கொண்டிருந்த வசந்தத்தை ரிக்குவின் மேற்பரப்பில் ஓவியமாய் சித்தரித்தார். “நீ என்னுடையவன்” தனது அன்பு நிறைந்த புன்னகையுடன் கூறினார் மாஸ்டர். ஆம், மாஸ்டரின் தலைசிறந்த படைப்பாய் மாறிக்கொண்டிருந்தான் ரிக்கு

ரிக்குக்கு மகிழ்ச்சியில் துள்ளி குதித்தான். இத்தனை நாள் அவன் அடைந்த துன்பங்கள் எல்லாம் ஒரு நொடியில் மறைந்து போனது. எல்லா போராட்டங்களையும் தங்கி கொண்டதற்காக தன்னையே புகழ்ந்துக் கொண்டான்.

பின்னர், மாஸ்டர் அவனை இருள் சூழ்ந்த ஒரு அறைக்கு அழைத்து சென்றார். ஒளியின் சுவடின்றி நரகத்தை போன்று காட்சி அளித்தது அந்த இடம். தீயில் கருகிய மரங்களின் நாற்றம் எங்கும் பரவி இருந்தது. மாஸ்டர் ரிக்குவை அங்கு தனியே விட்டு விட்டு “என் மேல் நம்பிக்கை வை” என்று கூறி விட்டு அங்கிருந்து மறைந்தார்.

சில நொடிகளில் எங்கும் தீ சல சலவென பரவியது. தீப்பிழம்புகள் ரிக்குவை சூழ்ந்துக் கொண்டது. நரகம் போன்ற அந்த இடம் வேறேதும் இல்லை சூலை தான்.

“மாஸ்டர் தயவு செஞ்சி என்ன இங்கிருந்து காப்பாற்றுங்க. என்னால இத தாங்க முடியல. திரும்பி வாங்க மாஸ்டர். நான் என்ன தப்பு செஞ்சிருந்தாலும் மன்னிச்சிடுங்க. நான் இனிமேல் அப்படி செய்ய மாட்டேன். நீங்க இனிமேல் என்ன பண்ணாலும் நான் அமைதியா இருப்பேன். உங்கள குறை சொல்ல மாட்டேன். தயவு செஞ்சி இங்கிருந்து என்ன கூட்டிட்டு போய்டுங்க” கத்தி கூச்சலிட்டான் ரிக்கு. ஆனால் மாஸ்டர் எங்கும் தென்பட வில்லை.

— கதை தொடரும்

கதாசிரியரிடம் இருந்து

எல்லாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

இந்த புதிய வருடத்தில் உங்கள் ஆசைகள் எல்லாம் நிறைவேற, முயற்சிகள் எல்லாம் கை கூட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நாமும் பல நேரங்களில் ரிக்கு மாதிரி நம் மாஸ்டர் மீது நம்பிக்கை வைக்காமல் துன்பங்களை கண்டு புலம்புகிறோம் இல்லையா

அடுத்த பாகம் 10 ஜனவரி 0.00 மணிக்கு வெளியாகும்.

மறக்காம உங்க கருத்துக்களை கம்மேண்டில் பதிவு செயுங்க. அப்படியே அந்த பாலோ பட்டனையும் தட்டி விடுங்க.

இது போன்ற கதைகளை படிக்க இந்த தொகுப்பு பட்டனை கிளிக் செய்யுங்க.

அடுத்த வாரம் சந்திப்போம் நண்பர்களே!

Posted in சிறுகதை, தமிழ், fiction, inspirational, modern, short story, tamil

அறியாமலே!

கோடை காலத்தின் முதல் வாரத்தில், காதல் ஜோடி காகங்கலான – டேவும் டெல்லாவும்,  சிலென்டா நகரத்தின் புறநகரில் தங்கள் கூட்டை கட்ட முடிவு செய்தன.

சரியான மரத்தைத் தேடி தேடி அந்த நகரை சுற்றி வந்த ஜோடிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பெரிய மரங்களில் ஏற்கனவே மற்ற காக்கைகளும் சிட்டுக்குருவிகளும் கூடு கட்ட தொடங்கி இருந்தன. பல நாட்கள் தொடர்ந்த தேடலுக்கு பின் சாம்பல் நிற கட்டிடத்திற்கு எதிரே வளர்ந்திருந்த ஒரு நெல்லிக்காய் மரத்தைத் தேர்ந்தெடுத்தன.

கூடு கட்ட தகுதியே இல்லாததாய் தோன்றியது அந்த மரம். குட்டையாய், மெல்லிய பட்டையுடன், ஓரிரு கிளைகள் அங்கும் இங்கும் வளர்ந்திருந்தன. அந்த மரத்தில் கூடு கட்டுவது சாத்திமற்ற காரியம் என்பதையும் வரபோகும் மழை காலத்தை அந்த மரம் நிச்சயம் தாங்காது என்பதையும் எந்த ஒரு புத்திசாலித்தனமான ஆன்மாவும் இந்நேரம் உணர்ந்திருக்கும், ஆனால் டேவுக்கும் டெல்லாவுக்கும் இருந்த கடைசி நம்பிக்கை அந்த மரம் தான்.

ஒவ்வொரு நாளும் வெகுதூரம் பறந்து சென்று தெருக்களில் இருந்து வைக்கோல் மற்றும் குச்சிகளை எடுத்து வந்து தங்கள் கூட்டைக் கட்டத் தொடங்கின. ஆனால் விதி அவர்களுக்கு எதிராக வேலை செய்தது. குச்சிகள் ஒவ்வொரு முறையும் தரையில் விழுந்தன. டேவும் டெல்லாவும் என்னென்ன தந்திரங்களையோ முயற்சித்தும் எல்லாம் தோல்வியில் முடிந்தன. ஆனால் அந்த காதல் ஜோடி தங்கள் முயற்ச்சியை கைவிடுவதாக இல்லை. ஒவ்வொரு நாளும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்தன. முடியாததை முடித்துக் காட்ட துணிந்தன அந்த காக்கைகள்.

டெர்ரி தூக்கத்திலிருந்து எழுந்து தனது பால்கனியில் இருந்து எட்டி பார்த்தான். கோடை காலத்தின் பிரகாசமான காலை பொழுதில் பறவைகளின் இன்னிசை எங்கும் தொனித்தது. அற்புத சிரிப்புடன் குழந்தைகள் தெருக்களில் விளையாடி கொண்டிருந்தனர். ஆனால் அவனது வாழ்க்கை அந்த பிரகாசமான காலை வேலைக்கு எதிர்மறையாய் இருளும் ஏமாற்றமும் நிறைந்ததாய் தோன்றியது.

அவன் மீண்டும் தன் மின்னஞ்சலைப் படித்தான்.

மதியம் 2 மணிக்கு விஜயா டவர்ஸில் நேர்காணல்

அந்த மாதத்தின் பத்தாவது நேர்காணலுக்கான அழைப்பு அது. “இந்த வேலை இல்ல பட்டதாரிக்கு வாழ்க ரொம்ப கஷ்டம் தான்,” என்று அவன் பெருமூச்சு விட்டான்.

அவனது வீட்டிற்கு எதிரே வளர்ந்திருந்த சிறிய நெல்லிக்காய் மரத்தில், இரண்டு காகங்கள் கூடு கட்ட முயற்சித்துக் கொண்டிருந்தன. “ஹேய் முட்டாள் காகங்களே, கண்ணு தெரியலையா! இந்த மரத்துல நிச்சயம் கூடு கட்ட முடியாது! நீங்க தப்பான மரத்தை தேர்ந்தெடுத்திருகீங்க!” என்று அந்த பறவைகளுக்கு கொஞ்சம் புரியவைக்க முயற்ச்சி செய்தான்.

ஆனால் அதை சொல்ல தனக்கு தகுதி இல்லை என்று தோன்றியது அவனுக்கு. ஏன் தெரியுமா? 4 ஆண்டுகளுக்கு முன்பு அவனும் அதே தவறை தான் செய்தான். தவறான மரம் – தவறான பாதையை, தவறான பாடத்தை தேர்ந்தெடுத்தான். மனிதனின் அற்புத படைப்பான கணினியின் பின் உலகம் ஓடிக் கொண்டிருந்த காலத்தில் அந்த கூடத்தில் ஒருவனாய் நிச்சயம் இருக்க கூடாது என்று முடிவு செய்தான். வாழ்நாள் முழுவதையும் ஒரு திரையின் முன் செலவிட வேண்டுமா? என்ற பயம் அவனுக்கு. ஆனால் அந்த ஒரு முடிவு அவன் வாழக்கையையே தலை கீழாய் புரட்டி போட்டது. கூட்டத்தைப் பின்தொடர்ந்து, ஒளிரும் திரைகளுக்கு தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த அவனது நண்பர்கள் அனைவரும் கற்பனைக்கு எட்டாத சம்பளத்துடன் ஒய்யார நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்தனர். டெர்ரிக்கோ வேலை இல்ல திண்டாட்டம்.

இறுதியில், டெர்ரி வேதியியலைத் தேர்ந்தெடுத்தான். ஏன் தெரியுமா? அவன் சிறுவனாய் இருந்த போது, வேதியியல் விஞ்ஜானியான ​​அவனது மாமா பல முறை டெர்ரியை தனது ஆய்வகத்திற்கு அழைத்துச் சென்று அவனுக்கு மாயாஜாலங்களை செய்து காட்டுவார். அவன் கண் முன்னே நிறமற்ற திரவங்கள் மாயமாய் கருப்பு, நீலம், சிவப்பு என பல நிறங்களில் மாறும். சில திரவங்கள் இருட்டிலும் ஒளிரும். அவனது மாமா பீக்கர்களுக்குள் மேகங்களையும்,  தங்க துகள்களையும் கூட உருவாக்குவார். டெர்ரி அவரைப் போன்ற நிஜ உலக மந்திரவாதியாக மாற விரும்பினான். இறுதியில் வேதியியலைத் தேர்ந்தெடுத்தான். அவன் வேதியியலை மனதார நேசித்தான். பல்கலைக்கழகத்தில் அவன் செலவிட்ட அந்த 4 ஆண்டுகளும் மறக்க முடியாத நினைவுகள். தனது வகுப்பின் சிறந்த மாணவனாக இருந்தான். ஆனால் காலங்கள் மாறி போயின. செயற்கை நுண்ணறிவு(Artificial intelligence), உருவகப்படுத்துதல்கள்(simulations) மற்றும் புது புது கண்டுபிடிப்புகளால் வேதியியலாளர்களின் தேவை குறைந்து போனது. அவர்கள் தேவைப்படாத  இனமாய் மாறிபோயினர் கடந்த 3 மாதங்களில் டெர்ரி 9 நேர்காணல்களில் இருந்து நிராகரிக்கப்பட்டான். அவன் தன் மீதும் தான் காதலித்த வேதியியலின் மீதும் வைத்திருந்த நம்பிக்கை எல்லாம் காற்றொரு காற்றாய் கரைந்து போனது.

அவனது சக வேதியியலாளர்களில் பெரும்பாலோர் வேலை தேடுவதை கைவிட்டு, ஓட்டுநர், எழுத்தாளர் மற்றும் நடிகர் என வழக்கத்திற்கு மாறான பல வேலைகளை தேர்ந்தெடுத்தனர்.

“நானும் பேசாம இதையெல்லாம் கைவிட்டுடடா?” பதிலே இல்லாத கேள்வியுடன் மீண்டும் படுக்கைக்கு சென்றான் டெர்ரி.

12 மணியளவு தூக்கம் களைந்து எழுந்த டெர்ரி பால்கனி வழியாக எட்டி பார்த்தான். அந்த ​​பறவைகள் இன்னும் அந்த மரத்தில் வேலை செய்து கொண்டிருந்தன.

“இந்த முட்டாள் பறவைகளே விடா முயர்ச்சியுடன் போராடும் போது நீ என் போராட கூடாது?” தனக்கு தானே கேள்வி எழுப்பினான் டெர்ரி.  

“சரி, சரி, நான் போறேன். ஏற்கனவே 9 முறை தோல்வி அடைஞ்சாச்சு. இந்த ஒரு தோல்வி என்ன செஞ்சிட போகுது?” என கூறியவாறு நேர்காணலுக்கு ஆயத்தமானான் டெர்ரி.

சூரிய அஸ்தமன வேளையில், குனிந்த தலையுடன், தோல்வியின் கவலையுடன் வீடு திரும்பினான் டெர்ரி. “ஆஆஆஆ இதெல்லாம் உங்களால தான்,” அந்த காகங்களை நோக்கி கூச்சலிட்டான். “மறுபடியும் தோல்வி! இதுக்கு மேல என்னால முடியாதுபா சாமி,” என்று புலம்பியவாறு வீட்டிற்குள் நுழைந்தான் டெர்ரி

ஒரு வாரம் கழித்து மீண்டும் அவனது ஸ்மார்ட் போனை மற்றொரு மின்னஞ்சல் வந்தடைந்தது.

காலை 10.30 மணிக்கு மணாலி கட்டிடத்தில் நேர்காணல்

“நான் போறதா இல்லை,” என்று நினைத்தபடி  தனது பால்கனியை வந்தடைந்தான் டெர்ரி.

அந்த இரண்டு காக்கைகள் மும்முரமாய் கூடு கட்ட முயற்ச்சித்துக் கொண்டிருந்தனா. “ஏன் இப்படி முடியாத ஒன்ன செஞ்சி உங்க வாழ்க்கைய வீணடிக்கிறீங்க! இதை கைவிட்டுட்டு வேற எதையாச்சும் செய்ய வேண்டியது தானே!” அந்த காகங்களை நோக்கி கூச்சலிட்டான் டெர்ரி. ஆனால் அந்த காதல் ஜோடிகள் அவனை சிறிதும் மதிக்கமால் தங்கள் வேலையை தொடர்ந்தன.

இரண்டு முட்டாள் பறவைகள் தன்னை விட தைரியமாய், தோல்வியை கண்டு துவண்டு விடாமல், மும்முரமாய் வேலை செய்துக் கொண்டிருப்பதைக் கண்டு பொறமை கொண்டான் டெர்ரி. “நான் ஒன்னும் உங்களுக்கு சளைத்தவன் இல்ல,” என்று கூறியவாறு வீட்டினுள் சென்ற டெர்ரி, அறை மணி நேரத்தில் டிப்டாப்பாக நேர்காணலுக்கு கிளம்பினான்.  

எப்போதும் போல, இன்றும் டெர்ரிக்கு தோல்வி தான் விடையாக கிடைத்தது. சோகத்துடன் வீடு திரும்பினான். தோல்வி உற்ற நண்பனாய் அவனை பற்றிக் கொண்டது. “இது எல்லா உங்களாலால தான்” என்று அந்த இரண்டு காகங்களையும் நோக்கி கூறிவிட்டு நேராக படுக்கைக்குச் சென்றான்.

அந்த பறவைகளைக் கண்டு பொறமைக் கொண்டு டெர்ரி நேர்காணலுக்கு செல்வதும், இறுதியில் தோல்வியுடன் வீடு திரும்புவதும் தொடர் கதையாய் மாறிப்போனது.

“வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளது. நேயர்களே உங்கள் குடைகளை மறக்காமல் எடுத்து செல்லுங்கள். இந்த வருடத்தின் முதல் மழையை இன்று நாம் கண்டு ரசிக்கலாம்.” வானிலை அறிக்கையை வாசித்த பெண்ணின் இனிய குரல் டிவியிலிருந்து ஒலித்தது.

டெர்ரி எப்பொழுதும் போலவே நேர்காணலுக்கு கிளம்பினான். அவனது வெள்ளை சட்டையின் சுருக்கங்களை சரி செய்தான், தனது கோப்புகளை எல்லாம் எடுத்துக் கொண்டான். கிளம்புவதற்கு முன் ஒரு முறை பால்கனிக்கு வெளியே எட்டி பார்த்தான். அந்த காக்கை ஜோடிகள் இன்னும் கூட்டைக் கட்ட முயற்ச்சித்துக் கொண்டிருந்தன.

டெர்ரி பெருமூச்சு விட்டு, தனது டையை சரிசெய்து தனது 25 வது நேர்காணலுக்கு கிளம்பினான். “இப்படியே போனா இந்த தோல்வியே எனக்கு பழகி போய் விடும் போல, ஹஹா” தன் நிலையை நினைத்து சிரித்தான் டெர்ரி.

நண்பகலில், இருண்ட மேகங்கள் வானத்தை ஆட்சி செய்தன.  சிறு தூறல்கள் சில நொடிகளில் பலத்த மழையாய் மாறியது.

டேவும் டெல்லாவும் மழையில் சொட்ட சொட்ட நனைந்தபடி முதல் முறையாக தங்கள் முயற்சிகளை எல்லாம் நிறுத்தி விட்டு அந்த கிளையில் அமர்ந்தனர்.

டெல்லா பெருமூச்சு விட்டு “நாம தோத்துட்டோம் அன்பே. நம்மால கடைசி வரைக்கும் இந்த கூட்ட கட்டவே முடியல” அவளின் களைத்த குரலில் கூறினாள்.

“ஆமா, நாம தோத்துட்டோம்” சோகத்துடன் தலை அசைத்தான் டேவ்.

“இந்த வருஷம் இல்லனா என்ன? அடுத்த வருஷம் நாம நல்ல கூடா கட்டி நம்ம குட்டிகளுக்கு நல்ல வாழ்க்கைய தருவோம். இந்த வருஷம் நமக்கு குடுத்து வைக்கல. அவ்வளவுதான். நாம முன்னாடி இருந்த அந்த பாழடஞ்ச பங்களாவுக்கே போய்டலாம் டேவ்,” புன்னகையுடன் கூறினாள் டெல்லா.  

அடைமழையில் நனைந்தவாறு டெர்ரி தனது வாசலுக்குள் நுழைந்தான். திடீரென்று அவனது தொலைபேசி ஒலித்தது. தொலைபேசியின் மறுமுனையில் அவன் கேட்ட வார்த்தைகள் அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கண்ணீர் தானாய் வழிந்தது. அந்த குரல் பேசி முடித்தும், அவன் கையில் இருந்த தொலைபேசியும் பையும் அவனையே அறியாமல் நழுவி தாழ்வாரத்தில் விழுந்தது.

டெர்ரி தனது முகத்தை துடைத்துக் கொண்டான்.

“எனக்கு வேலை கிடைச்சிடுச்சி” அவன் தனக்குத்தானே முணுமுணுத்தான்.

“இது ஒன்னும் கனவு இல்லையே?” அவன் தன்னையே கிள்ளி பார்த்தான்..

“எனக்கு உண்மையிலே வேலை கிடைச்சிடுச்சி! எனக்கு வேலை கிடைச்சிடுச்சி! எனக்கு வேலை கிடைச்சிடுச்சி!” மெல்ல மெல்ல உயர்ந்த அவன் குரல் கடைசியில் கூச்சலாய் மாறியது. “எனக்கு வேலை கிடைச்சிடுச்சி!” மொத்த உலகமும் கேட்கும் அளவிற்கு கூப்பாடு போட்டான் டெர்ரி.

மகிழ்ச்சியில் திளைத்தான். கொட்டும் மழையில் ஆனந்த நடனமாடினான். 

டெர்ரி அந்த நெல்லி மரத்தை நோக்கி ஓடினான். அந்த இரண்டு காகங்களும் ஈரம் சொட்ட சொட்ட கிளைகளில் அமர்ந்திருந்தன.

“ரொம்ப ரொம்ப நன்றி. உங்களால தான் மனம் தளராம முயற்ச்சி பண்ணேன். உங்களால தான் ஒவ்வொரு தோல்வியையும் தொடச்சி போட்டுட்டு மீண்டும் மீண்டும் போராடினேன். நீங்க தான் காரணம். என்னோட இந்த மகிழ்ச்சிக்கு நீங்க தான் காரணம். எனக்கு வேலை கிடைச்சதுக்கு நீங்க தான் காரணம்,” மிக பெரிய புன்னகையுடன் வார்த்தைகளை கொட்டி தீர்த்தான் டெர்ரி. 

“இந்த மனுஷன் ஏதோ கத்திக்கிட்டு இருக்கான். என்னனு தெரியலையே? டேவ் உனக்கு இந்த மனுஷங்க மொழி தெரியுமா? இவன் என்ன சொல்ல வரான்?” கேட்டாள் டெல்லா.

“அவ்வளவா தெரியாது. ஆனா நம்மள இங்க இருந்து துரத்துறான்னு நினைக்கிறன். ஏதோ பைத்தியம் மாதிரி சிரிச்சிக்கிட்டு இருக்கான். என்னனு தெரியல. வா அன்பே, நம்ம பழைய வீட்டுக்கே போவோம். இதுக்கு மேல இந்த மழையில இருந்த உனக்கு சளி பிடிச்சிடும்,” டேவ் கூறினான்.

“சரி, அன்பே, போலாம்” என்று டெல்லா கூறினாள். அவர்கள் இருவரும் தாங்கள் செய்த அந்த அற்புதத்தை அறியாமலே அங்கிருந்து பறந்து சென்றனர்.

யார் நினைத்திருப்பார்கள்? இவ்விருவரின்

வலுவிழந்த முயற்சி

உடைந்த போன நம்பிக்கை

கரைந்து போன போராட்டம்

தோல்வியில் முடிந்த இந்த தேடல்

ஒருவனின் இருளை போக்கி

அவனின் அச்சத்தை தூக்கி எறிந்து

அவனின் நம்பிக்கை மீண்டும் புத்துயிர் பெற்றதற்கு

காரணமாய் மாறும் என்று

ஒருபோதும் துவண்டு விடாமல்

விடா முயர்ச்சியுடன் போராடுங்கள்

உங்கள் பாதையின் முடிவு தோல்வி என தெரிந்தாலும்

உங்கள் செய்கையின் பலன் வெறுமையாய் போனாலும்

ஒருபோதும் சோர்ந்து விடாதே என் நண்பா

யாருக்கு தெரியும்

உனது இந்த தோல்வி

யாரோ ஒருவரின் வெற்றிக்கு காரணமாகலாம்

அறியாமலே

நீயும் ஒருவரின் வாழ்கையின் ஒளிசுடர் ஆகலாம்!

வணக்கம்

கதாசிரியரிடம் இருந்து

என்ன வாசகர்களே, எல்லாரும் எப்படி இருக்கீங்க?

ரொம்ப நாள் ஆச்சு உங்களை எல்லாம் சந்திச்சு 🙂

இந்த மாசத்தோட கதை கொஞ்சம் லேட் ஆகிடுச்சி, கொஞ்சம் மன்னிச்சிகோங்க.

இந்த கதை உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நம்புறேன்.

மறக்காம உங்க கருத்துக்களை பதிவு செயுங்க.

இந்த கதைய உங்க நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஷேர் செய்ங்க.

யாருக்கு தெரியும், இந்த வார்த்தைகள் அவங்களோட பல கேள்விகளுக்கு பதிலாக இருக்கலாம். இந்த கதை அவங்களோட புன்னகைக்கு காரணமாக மாறலாம். யாருக்கு தெரியும்? 🙂

கடைசியா கிறிஸ்துமஸ் காலம் வந்தாச்சு!!

உங்க உறவுகளோடும் நண்பர்களோடும் இந்த நாட்களை செலவிடுங்க. அவங்க மேல வச்சிருக்க அன்பை அவங்களுக்கு ஞாபக படுத்துங்க.

அடுத்த கதை ஜனவரி மாதம் வெளியாகும்.

ஆனா உங்களுக்காக ஒரு கிறிஸ்துமஸ் பரிசு காத்திருக்கு!

மறக்காம அந்த பாலோ பட்டனை தட்டி விடுங்க 🙂

இதை போன்ற மற்ற கதைகளை படிக்க, இந்த தொகுப்பு பட்டனை கிளிக் செயுங்க

அடுத்த கதையில் சந்திக்கலாம்:)

Posted in சிறுகதை, தமிழ், fiction, History, inspirational, short story, tamil

வரலாற்றில் இடம் பிடிக்க – பாகம் II

அன்றிலிருந்து நானும் அந்த சிறுவனும் இணை பிரியா நண்பர்களாய் மாறினோம். மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத ஒரு உறவு அது. இந்த பிரபஞ்சத்தின் மொழியை நாங்கள் கற்று கொண்டும். வார்த்தைகள் தேவை படவில்லை, வெறும் பார்வை ஒன்றே ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்ள போதுமானதாய் தோன்றியது. நண்பனாய், துணைவனாய், சகோதரனாய் பிரிக்க முடியாத சக்தியாய் மாறினோம்.

அந்த சிறுவன் மாசிடோனியாவின் பட்டத்து இளவரசன் என்று அறிந்துக் கொண்டேன். அவன் ஒரு திறமையான வாள்வீரன், வில் வித்தையில் வல்லவன், தோற்கடிக்க முடியாத போராளி, உலகப் புகழ்பெற்ற அறிஞரான அவன் ஆசிரியர் அரிஸ்டாட்டிலின் மிக சிறந்த மாணவன், ஈடு இணை இல்லா புத்திசாலி. இப்படி அவனை பற்றி கூறிக் கொண்டே போகலாம்.

நானும் எதற்கும் சலித்தவன் இல்லை. காற்றை கிழித்துக் கொண்டு செல்லும் அளவுக்கு வேகம் கொண்டவன், போர்களத்தில் மரணம் கண் எதிரே நின்றாலும் அதனை தைரியமாய் எதிர்க் கொண்டு எதிராளியை கொன்று குவிக்கும் ஆற்றல் பெற்றவன். உலகம் கண்டிராத வலிமை மிக்க போர் ஆயுதம் நான்.

ஒலிம்பிக்ஸ் தான் நாங்கள் ஒன்றாய் எதிர்க்கொண்ட முதல் சவால். இந்த உலகிற்கு எங்கள் திறமையை வெளிபடுத்தக் கிடைத்த முதல் வாய்ப்பு. நாங்கள் தேரோட்ட பந்தையத்தில் கலந்து கொண்டோம். பல தேசத்து வீரர்களும் இளவரசர்களும் எங்களுடன் போட்டியிட்டனர்.

என் இளவரசன் என்னிடம் வந்து “நண்பா நாம் நிச்சயம் வென்று விடுவோம், நாம்மால் இதை நிச்சயம் சாதிக்க முடியும்” என்று பிரகாசமான புன்னகையுடன் கூறினான்.  

விசில் ஊதப்பட்ட அந்த நொடியில் எல்லா தேர்களும் சீறி பாய்ந்தன. நானும் பாலைவன புயலை போல் பாதையில் இருந்த தடைகளை எல்லாம் தூக்கி எறிந்து சீறி பாய்ந்தேன். நாங்கள் இருவரும் முன்னிலையில் ஓடிக் கொண்டிருந்த சமயத்தில் பின்னில் இருந்து வந்த ஈட்டி என் இளவரசனின் கைகளை சிராய்த்து சென்றது. அந்த ஈட்டி வேறு யாருடையதும் அல்ல, எங்கள் பின்னால் வந்துக் கொண்டிருந்த இளவரசன் நிக்கோலசுடையது. “நண்பா கொஞ்சம் வேகத்தை குறை” என்று என் இளவரசன் கூறினான். “இளவரசன் பயந்துவிட்டானோ? நிச்சயம் இருக்காது” எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அவன் மீது முழு நம்பிக்கை வைத்து என் வேகத்தை சற்றே குறைத்தேன். எங்களை முந்தி சென்றான் நிக்கோலஸ். எங்களை பயமுறுத்தி விட்டதாக நினைத்து சிரித்துக் கொண்டிருந்தான். அந்த நொடியில் என் இளவரசன் தன் வில்லை எய்தான். அம்பு நிகோலசின் முதுகில் பாய்ந்தது. அவன் தேர் நிலை தடுமாறி கவிழ்ந்தது. பிறகு என்ன, வெற்றி எங்கள் வசமானது.  

ஆலிவ் இலைகளால் ஆனா கிரீடம் எங்கள் சிரசை அலங்கரிக்க நாங்கள் எங்கள் தாய் நாட்டிற்கு திரும்பினோம். ஒலிம்பிக்ஸில் வெற்றி வாகை சூடிய இளவரசனையும் அவன் குதிரையையும் காண நாட்டு மக்கள் ஆர்வமாய் நகர வாசலில் காத்திருந்தனர். நாடே விழா கோலம் பூண்டிருந்தது. எங்கள் புகழ் பல நாடுகளுக்கு காட்டு தீ போல் பரவியது.

என் இளவரசனின் பத்தொன்பதாம் வயதில் உலகை வெல்வதற்கான எங்கள் பயணம் தொடங்கியது. அணைத்து போர் கலைகளையும் கற்று தேர்ந்த எம் நாட்டின் தலை சிறந்த வீரர்கள் அடங்கிய படையுடன் நாங்கள் முன்னேறினோம்.

எங்கள் பயணம் மசிடோனியாவில் தொடங்கி இந்தியா வரை சென்றது. எங்கள் பாதையில் இருந்த ஒவ்வொரு ராஜ்யத்தையும் கை பற்றினோம். ஒவ்வொரு போரும் வித்தியாசமானவை. சில போர்களில் எங்கள் படை பலத்தையும் சில போர்களில் எங்கள் விவேகத்தையும் பயன்படுத்த வேண்டி இருந்தது. சில போர்கள் சில மணி நேரங்களிலே முடிவுற்றது, சில போர்கள் நாட்கள் என்ன, பல வாரங்கள் நீடித்தது. எங்களை எதிர்க்க நினைத்த ராஜ்யங்கள் நிலை குலைந்தன, அடிபணிய முடிவெடுத்த ராஜ்யங்கள் தப்பித்துக் கொண்டன.   

மாசிடோனியாவின் இளவரசன் தனது குதிரையுடன் அணிவகுக்கும் அந்த காட்சியே பல ராஜாக்களை கலங்கடித்தது.

ஒரு முறை நானும் என் இளவரசனும் எங்கள் பரம எதிரியான டாரியசின் அரசவைக்கு தூது சென்றோம். இப்போது நினைத்து பார்த்தால் அது எவ்வளவு பெரிய முட்டாள் தனமான யோசனை என்று புரிகிறது. என்ன செய்வது. அந்த நாட்களில் இளமையின் துள்ளலும், சாகசத்தை தேடி செல்லும் தைரியமும் மனதில் நினைத்ததை செய்து விட வேண்டும் என்னும் வேகமும் நிறைந்திருந்தன.

கோட்டையின் வாசலில் நான் காத்துக் கொண்டிருந்தேன். அந்த நள்ளிரவில் வேக வேகமாய் ஓடி வந்த என் இளவரசன் “நண்பா கிளம்பு நான் யாரென கண்டு பிடித்து விட்டார்கள், என்னை கொல்ல ஒரு படையே வந்துக் கொண்டிருக்கிறது” என்று கூறினான். அந்த வார்த்தைகளில் பயத்தையும் தாண்டி ஆர்வமும் உற்சாகமும் கலந்திருந்தது. மின்னல் வேகத்தில் அங்கிருந்து நான் ஓட தொடங்கினேன். பல மணி நேர ஓட்டத்திற்கு பின் ஒரு உறைந்த நதியை வந்தடைந்தோம். தொட்டாலே நொறுங்கி விடும் அளவிற்கு மெல்லிய பனி நதியின் மேல் பரப்பில் படர்ந்திருந்தது. ஒன்று எதிரி படைகளிடம் பிடிபட்டு கொல்லப்படுவது இல்லை இந்த உறைந்த நதியில் மாட்டி உயிரை விடுவது. நாங்கள் அந்த நதியை தேர்ந்தெடுத்தோம். நான் மென்மையாய் அந்த பனி படலத்தில் காலடி எடுத்து வைத்தேன். என் ஒவ்வொரு அடியிலும் சிறிது சிறிதாய் நொறுங்கிய அந்த பனி பாதி வழியில் முற்றிலும் நொறுங்கி போனது. நல்ல வேலையாக என் வேகத்தாலும் விவேகதாலும் நாங்கள் அன்று உயிர் பிழைத்தோம். எங்களை துரத்தி வந்த வீரர்கள் நதியை கடக்க முடியாமல் அக்கரையிலே சிக்கிக் கொண்டனர். அதை கண்டு நாங்கள் இருவரும் குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தோம். அந்த இரவை மறக்கவே முடியாது,  

கிட்டத்தட்ட மொத்த ஐரோப்பாவையும் பெர்சியாவையும் வெற்றிக் கொண்ட பின் நாங்கள் இந்தியாவை அடைந்தோம். இத்தனை நாட்களாய் போர்களை சந்தித்த எங்கள் படைவீரர்கள் சோர்ந்து கலைப்புற்றனர்.

இதுவரை நாங்கள் கண்ட போர்களை விட இந்திய மண்ணில் நாங்கள் கண்ட போர் முற்றிலும் வித்தியாசமாய் இருந்தது, இந்திய மன்னன் போரஸின் படைகளில் யானை சிறுத்தை என பயிற்றுவிக்கப்பட்ட பல இனம் தெரியா மிருகங்கள் இருந்தன. அவைகளுக்கு எம் படைகளால் ஈடு கொடுக்க முடியவில்லை.

எனவே இது வரை உலகம் கண்டிராத ஒரு போர் தந்திரத்தை நாங்கள் பிரயோகித்தோம். முந்தைய போர்களில் நாங்கள் கொள்ளை அடித்த வெண்கல சிலைகளுக்கு மனித உடைகளை அணிவித்து அவற்றை நெருப்பூட்டி சூடக்கினோம். பின்னர் அந்த சிலைகளை போர்களத்தில் முன்னிலையில் நிறுத்தினோம். அந்த மிருகங்கள் அவைகளை எதிரிகள் என நினைத்து சீறி பாய்ந்தன. சூடு அவற்றின் கைகால்களையும் வாய்களையும் சுட்டு பொசுக்கியது. வந்த வேகத்தில் அனைத்தும் தங்கள் கூண்டுகளுக்கு திரும்பி சென்றன. பின்னர் என்ன வெற்றி எங்கள் வசம் ஆனது.

ஆனால் அந்த போர்களமே என் கடைசி சாகசமாய் முடிந்தது. போரில் பலத்த காயமடைந்தேன். வலி தாங்க முடியாமல் போர்களத்திலே சரிந்து விழுந்தேன். என் நிலைமையை கண்டதும் என்னை நோக்கி ஓடி வந்தான் என் இளவரசன். அவன் தங்க நிற கண்களில் சொல்லி முடியா துயரம், கட்டுக் கடங்காத கண்ணீர், சூரியனை போன்ற பிரகாசமான அவன் முகத்தில் விளக்க முடியா சோகம் – பல நூறு அரசர்களை தோற்கடித்து வெற்றி வாகை சூடிய மாமன்னனாய் அல்ல தன் உயிர் நண்பனை இழக்கும் தருவையில் கலங்கி நின்ற ஒரு இளைஞனாய் மாறினான் என் இளவரசன். வேக வேகமாய் அவனும் மற்ற வீரர்களும் என்னை பாதுகாப்பான இடத்திற்கு தூக்கி சென்றனர். பல மணி நேர வைத்தியம் கூட என்னை காப்பாற்ற முடியவில்லை. என்னை இருக்கமாய் அனைத்துக் கொண்ட என் இளவரசன் மென்மையாய் என் கழுத்தை தடவி கொடுத்தான். அவன் கரங்களிலே என் உயிர் பிரிந்தது.

என்னை அருகில் இருந்த நகரத்தில் அடக்கம் செய்த என் இளவரசன், அந்த நகரத்திற்கு என் பெயரையே சூட்டினான். அத்துணை அரிதானவன் நான்.

இந்நேரம் நான் யாரென கண்டு பிடித்திருப்பீர்களே. ஹாஹா

நான் வேறு யாருமில்லை, அலெக்ஸாண்டர் தி கிரேடின் தோழனும் துனைவனுமான அசாதாரண குதிரை புஸிபாலஸ்

ஒரு வேலை நான் மட்டும் என் இளவரசனை சந்தித்திருக்க விட்டால், இந்நேரம் ஏதோ ஒரு வயலில் வேலைக்காரணாகவோ இல்லை எதாவது ஒரு பணக்காரன் வீட்டு கொட்டகையில் அவனின் செல்ல பிராணியாகவோ இருந்திருப்பேன்.

என் இளவரசனும் பத்தோடு பதினொன்றாக பெயர் தெரியாத இளவரசனாய் வாழ்ந்து மடிந்திருப்பான்.

ஆனால் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு பிடித்தோம். ஒருவருக்கு ஒருவர் துணையாய், ஒரே கனவை நோக்கி முன்னேறினோம். ஒருவர் மேல் ஒருவர் அளவுக்கடந்த நம்பிக்கை கொண்டிருந்தோம், மரணத்தின் விளிம்பில் கூட ஒருவரை ஒருவர் கெட்டியாய் பிடித்திருந்தோம்.

என் இளவரசனை போன்ற ஒரு மாமனிதனை நீங்கள் சந்திப்பது கடினம் தான். ஆனால் நீங்கள் தேடும் அந்த நண்பனை நீங்கள் சீக்கிரம் சந்திப்பீர்கள் என நம்புகிறேன்.

உங்கள் போராட்டங்களில் உங்களின் உற்ற துணையாய்

உங்கள் தோல்விகளில் உங்களை தாங்கி பிடிக்கும் தூணாய்

உங்கள் வெற்றிகளை கொண்டாடும் நண்பனாய்

உங்கள் கனவுகளை நினைவாக்கும் அற்புத ஜீனியாய்

உங்களின் அந்த அசாதாரண மனிதனை நீங்களும் நிச்சயம் கண்டு பிடிப்பீர்கள்.

ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே

– பைபிள்

வணக்கம்

கதாசிரியரிடம் இருந்து

என்ன நண்பர்களே கதை எப்படி இருக்கு?

உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நம்புறேன்.

ஒரு காலத்துல நானும் உங்கள மாதிரியே தான், தனிமையில் இனிமை கண்டவன். கூட்டு முயற்சியிலே எனக்கு எப்பவும் நம்பிக்கை இருந்ததே இல்லை. பள்ளியிலே கூட ஒன்னா சேர்ந்து பண்ண வேண்டிய ப்ராஜெக்ட் கூட நானே தனியா செஞ்சிடுவேன். மத்தவங்கள நம்பி விட்டதே இல்லை.

ஆனா சமீபத்துல ஒரு கல்லூரி கிளப்காக யாருனே தெரியாத சிலரோட சேர்ந்து வேலை செய்ய வேண்டிய நிலைமை வந்துடுச்சி. நாங்க ஒன்னா இருந்த அந்த சில நாட்கள் எனக்கு ஒரு மிக பெரிய பாடத்த கத்துக் குடுத்துச்சி. நமக்கு எல்லாமே தெரிஜிருக்கணும்னு அவசியமே இல்லை. நம்மள சுத்தி உள்ளவங்க மேல நம்பிக்கை வச்சா போதும். எல்லாமே சரியா நடக்கும். நாம விழுந்தா அவங்க தூக்கி விடுவாங்க, அவங்க தவறு செஞ்சா நாம திருத்துவோம். ஒரு கூட்டு முயற்சியின் பலத்தை நான் அப்போ தான் புரிஞ்சிகிட்டேன்.

நீங்களும் இந்த கதை மூலம் அதை புரிஞ்சிருப்பீங்கனு நம்புறேன்.

அடுத்த கதை நவம்பர் 8 வெளியாகும்.

நீங்க என்ன இன்ஸ்டாகிராம்

https://www.instagram.com/?hl=en

இல்லை

பேஸ்புக்ல

https://www.facebook.com/I-am-a-Textrovert-104311854657727/

கூட தொடரலாம்.

மறக்காம உங்கள் கருத்துக்களை பதிவு செயுங்க.

அந்த பாலோ பட்டனை கொஞ்சம் தட்டி விடுங்க.

அடுத்த கதையில் சந்திக்கலாம் 🙂

Posted in சிறுகதை, தமிழ், fiction, History, inspirational, short story, tamil

வரலாற்றில் இடம் பிடிக்க – பாகம் I

என்ன? என் அழகுல மெய் மறந்துட்டீங்க போல? ஹாஹா ஆமா. இது நான் தான். இது என்னுடைய கதை தான்.

என்ன அப்படி பார்க்கிறீங்க? ஏன்? ஒரு குதிரை ஹீரோவா இருக்க கூடாதா என்ன? எத்தன வருஷம் ஆனாலும் இந்த மனுஷங்க மட்டும் மாறவே மாட்டங்க.

இந்த நொடி வரைக்கும் கிட்டதட்ட 107 பில்லியன் மனிதர்கள் இந்த உலகத்துல வாழ்ந்திருக்காங்க. ஆனா அவர்களோட கனவுகளும் ஆசைகளும், எண்ணங்களும் வெற்றிகளும், சொந்த பந்தங்கள் எல்லாம் அவங்களோடு அழிஞ்சி போச்சு. அவங்க வாழ்ந்ததற்கான அறிகுறியே இல்லாம போய்டுச்சி.

ஆனா இந்த சாதாரண மனிதர்களை தாண்டி சில அசாதாரண மனிதர்களும் இருந்தாங்க. இந்த உலகத்தையே மாற்ற முடியும்னு நம்பி அதை செஞ்சும் காட்டிய சில மாமனிதர்கள். எதையும் அடைய முடியும் என்னும் நம்பிக்கையும், எல்லாத்தையும் எதிர்க்கொள்ளும் தைரியமும் நிறைஞ்ச சூப்பர் ஹீரோக்கள் அவங்க. நூற்றாண்டுகளா அவர்களோட கதைகள் வழி வழிய சொல்லப்பட்டு வரலாற்றோட பக்கங்கள்ல இடம் பிடிச்சிருக்கு. இன்றைக்கும் கூட நீங்களும் நானும் அந்த அசாதாரண மனிதர்களை ஞாபகம் வச்சிருக்கோம். அவங்கள போல வாழ ஆசைபட்றோம்.

இதை விட ஆச்சரியம் என்ன தெரியுமா? மனிதர்களால் எழுதப்பட்ட வரலாற்றோட பக்கங்கள்ல சில விலங்குகளும் இருக்காங்க. மனிதர்கள் கால காலமா விலங்குகள பார்த்து பொறமை பட்டதுண்டு. எங்களோட பன்முகத்தன்மைய அவங்களால பொறுத்துக்க முடியல. ஆனா அப்படிப்பட்ட மனிதர்களால கூட இந்த அதிசய விலங்குகள் வரலாற்றில் இடம் பிடிப்பத தடுத்து நிறுத்த முடியல. அவ்வளவு பவர் எங்களுக்கு. 

அப்படி இடம் பிடித்த சில விலங்குகள்ல மிக முக்கியமானவன் நான் தான். நான் வாழ்ந்த காலத்துல இருந்து பல நூறு ஆண்டுகள் கழிச்சி வாழற நீங்க கூட என் கதைய கேட்டதும் “ஓ எனக்கு இவன தெரியும். நான் பல தடவ கேள்வி பட்டிருக்கேன்” அப்படின்னு சொல்லுவீங்க. அவ்வளவு முக்கியமானவன் நான்.

என்னுடைய கதைய பல மனிதர்கள் சொல்லி கேட்டிருப்பீங்க. ஆனா முதல் முதல்ல நானே என் கதைய சொல்ல போறேன்.

என்ன ஆர்வத்தை கட்டு படுத்த முடியலையா? சரி வாங்க கதைக்குள்ள போவோம்.

முன்னொரு காலத்தில் பெர்சியாவின் வளமான புல் வெளிகளில் லாமோமென்டியோ என்னும் குதிரை வர்த்தகர் வாழ்ந்து வந்தார். அவரது பண்ணையில் உலகின் பல மூலைகளில் இருந்து கொண்டு வரப்பட்ட உயர் வகை குதிரைகள் இருந்தன. அங்கு தான் என் வாழ்க்கை தொடங்கியது. தொலை தூர கிரகங்கள் விண்ணை அலங்கரித்த அந்த அற்புத இரவில் தான் நான் பிறந்தேன். என் தந்தையின் துணிச்சலும் என் தாயின் இணையில்லா அழகும் கலந்த கலவையாய் இறைவனின் மிகச் சிறந்த படைப்பாய் வளம் வந்தவன் நான். அந்த புல் வெளிகளில் தான் யுத்த கலைகளில் பயிற்சி பெற்று மாபெரும் வீரனாய் மாறினேன்..

என்னை போன்ற ஒரு வீரன் மனிதர்களுடன் ஏன் வாழ்கிறான் என்று தானே யோசிக்கிறீர்கள். ஹாஹா இதே கேள்வியை பலர் என்னிடம் கேட்டதுண்டு. ஒவ்வொரு முறையும் என் பதில் ஒன்று தான். யாராவது உங்களிடம் வந்து நான் உன்னை பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன். உனக்கு 3 வேலையும் மறக்காமல் உணவளிக்கிறேன். நீ தங்க இடம் தருகிறேன். அந்த இடத்தை கூட நானே சுத்தம் செய்கிறேன். ஆனால் பதிலுக்கு என்னை தூக்கி கொண்டு மட்டும் செல்வாயா? என்று கேட்டால் நீங்கள் கூட ஏற்றுக்கொள்வீர்கள் தானே. அதையே தான் நாங்களும் செய்தோம். ஏதோ எங்களை அடிமைபடுத்தி விட்டதாக வீண் பெறுமை பேசுகிறார்கள் இந்த மனிதர்கள். ஆனால் உண்மையில் அவர்கள் தான் எங்களுக்கு அடிமைகள் போல் வேலை செய்கிறார்கள். சரி அது போகட்டும்

அந்த புல் வெளிகளில் ஒரு கவலையும் இன்றி சுற்றி வந்த நாட்களை என்றுமே மறக்க முடியாது. அன்பும் அரவணைப்பும் நிறைந்திருந்த இடம் அது. என் வாழ்வின் மிக சிறந்த நாட்கள் அவை.

அந்த நாட்களில் தான் எனக்கே முட்டாள் தனமாய் தோன்றிய ஒரு குறிக்கோளை அடைய வேண்டும் என்று முடிவெடுத்தேன். எப்படியாவது வரலாற்றில் இடம் பெற வேண்டும். வரும் தலை முறை என் சாகசங்களை கண்டு வியக்க வேண்டும். என் பெயர் பாட புத்தகங்களில் இடம் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் பெயர் மக்கள் மனதில் உள்ளவரை நான் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறேன் என்று நான் முழு மனதுடன் நம்பினேன்.

ஆனால் எப்படி? என்ற கேள்விக்கு மட்டும் விடை கிடைக்கவில்லை.    

வருடங்கள் உருண்டன, என் புகழ் எட்டு திசைக்கும் பரவியது. என்னை சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் பல மன்னர்களும் வீரர்களும் முயற்சித்தனர். ஆனால் ஒருவராலும் என்னை அடக்க முடியவில்லை.

“அடங்கா மிருகம்” என்ற பட்டத்தைப் பெற்ற நான் இறுதியில் மாசிடோனியாவின் மன்னன் பிலிப்பின் நாட்டை வந்தடைந்தேன்.

“இந்த மிருகத்தை அடக்கக்கூடிய மனிதன் உலகையே வென்று மிகபெரிய போர்வீரர்களையும் அடிபணிய செய்வான்” என்று ராஜாவின் சூத்திரதாரி டெல்பியால் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது.

விரைவில் நான் மாசிடோனியாவின் மிகச்சிறந்த மனிதர்களால் சூழப்பட்டேன். என் ஆற்றலைச் சமாளிக்க அவர்கள் தங்களால் முடிந்தவரை முயன்றனர், அணைத்து தந்திரங்களையும் முயற்சித்தனர், ஆனால் அவர்களால் என் வலிமைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

கூட்டத்திலிருந்து ஒரு சிறுவன் தோன்றினான். புன்னகையுடன் என்னை நோக்கி நடந்து வந்தான். சிங்கத்தைப் போன்ற கம்பீரம் அவன் புன்னகையில் ஒளிந்திருந்தது. அவனை கண்ட அந்த நொடியில் என் பிரபஞ்சம் முழுவதும் ஸ்தம்பித்து நின்றது. எங்கும் விளக்க முடியா அமைதி. தேனிலே முக்கி எடுத்த அவனது பழுப்பு நிற கண்கள் சூரிய ஒளியில் வைரமாய் காட்சி அளித்தது. உலகையே வெல்லும் சக்தி, சாதிக்க வேண்டும் என்னும் வெறி,  நிச்சயம் வெற்றி அடைவேன் என்னும் நம்பிக்கை, வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டும் என்னும் ஆர்வம் அவன் கண்களில் மிளிர்ந்தது. அந்த கண்களில் என்னையே நான் மீண்டும் ஒரு முறை கண்டேன்.

அவன் மென்மையாய் என் கடிவாளத்தை பிடித்து அந்த கூட்டத்தை விட்டு தூரமாய் நடத்தி சென்றான். என் தலையை தடவி கொடுத்து “நீயும் நானும் ஒரே மாதிரியானவர்கள். இந்த உலகை ஆள பிறந்தவர்கள். இந்த பயணத்தில் என்னுடன் சேர்ந்து கொள் நண்பா” என்று கூறினான். நான் இத்தனை காலமாய் தேடிய என் கேள்விக்கான பதில் இவன் தான் என்று அப்போது தோன்றியது. என்னை சொந்தம் கொண்டாட தகுதியானவன் இவன் தான் என்று முடிவு செய்தேன். என் சேணத்தில் ஏறி உட்கார்ந்தான். அந்த நாள் அந்த சிறுவன் என்னை அடக்கி விட்டான். உலகை வெற்றி கொள்ளும் எங்கள் பயணத்தில் அது தான் முதல் படி.

தொடரும்

கதாசிரியரிடம் இருந்து

வணக்கம் நண்பர்களே

கதைய படிச்சதும் “அந்த சிறுவன் ………….. தானே, அந்த குதிரை ………….. தானே” அப்படின்னு சொல்லிகிட்டு இருக்கீங்க போல.

இருந்தாலும் நம்ம ஹீரோவே அவரோட பெயர சொல்ற வரைக்கும் காத்திருப்போம்.

மறக்காம உங்க கருத்துக்கள, எண்ணங்கள, கேள்விகள பதிவு செயுங்க.

அடுத்த பாகம் அடுத்த ஞாயிறு 0.00 வெளியாகும்.

அதுவரை காத்திருங்கள் 🙂

Posted in சிறுகதை, தமிழ்

தென்னிந்திய ராஜாவும் வன தேவதையும் – பாகம் I

முன்னொரு காலத்தில் தென்னிந்தியாவை ஆண்ட மன்னன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனது 12 ஆம் வயதில் அவன் தந்தையையும் தாயையும் இழந்து அவன் ராஜாவாக அரியணை ஏறினான். அடம்பர அணிகலன்கள் அலங்கரிக்க, வீரர்கள் படை சூழ, பற்பல பலகாரங்கள் அவன் மேசையை அலங்கரிக்க – பலரும் பொறமை கொள்ள தக்க பகட்டான வாழ்கையை அவன் வாழ்ந்து வந்தான். ஆனால் ராஜாவுக்கோ அரண்மனை வாழ்க்கை நரகம் போல் தோன்றியது. அரியணையை அடைய விரும்பிய அனேக கொடூரர்கள் அந்த அரண்மனையை ஆக்கிரமித்திருந்தனர். அவனது  இரவுகள் பயத்தால் நிறைந்திருந்தன,  நாட்கள் அச்சத்தில் ஓடிகொண்டிருந்தன. அவன் உயிரை குடிக்க பிணந்தின்னி கழுகுகள் காத்துகொண்டிருந்தன. மனிதர்களின் பேராசைக்கு முன் நிற்க பலமில்லாத அந்த 12 வயது சிறுவன் தனிமையை தனது தோழனக்கி கொண்டான். அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என பறைசாற்றிய அந்த உன்னத அன்பு, அந்த ராஜாவின் இதய கதவிற்குள் உட்புக முடியாமல் தோற்றுவிட்டது. அவனது நாட்கள் தனிமையிலும் வெறுமையிலும் நகர்ந்தன.

ஒரு அற்புதமான காலை வேளையில்,  ராஜாவும் அவனது அமைச்சர்களும் வேட்டையாட காட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் குதிரைகளில் ஏறி, இரையைத் தேடி வெகுதூரம் பரவினர். ஆனால் இந்த வேட்டை நாடகம் எல்லாம் ராஜாவை கொள்ள துணிந்த அவன் மந்திரிகளின் சூழ்ச்சி என்பதை அவன் அறியாதிருந்தான்.. தொலைதூரத்தில் இருந்து பாய்ந்து வந்த அம்பு அவன் தோள்களில் துளைத்தது. இரத்தம் சொட்ட சொட்ட, எஞ்சியிருந்த கொஞ்சம் பலத்தோடு, தன் உயிரை காப்பற்ற அவன் உதவியை தேடி நடக்க தொடங்கினான். வானம் இருள தொடங்கியது. சுற்றிலும் மர்மான நிசப்தம் அந்த காற்றை நிரப்பியது. மரண பயம் அவனை துரத்த, பித்துபிடித்த மனிதனை போல் அந்த காட்டில் வளம் வந்த ராஜா இறுதியில் ஒரு ஆல மரத்தின் அடியில் சரிந்தான். “இது தன் முடிவா? நான் சாகப்போகிறேனா?” அவன் கண்கள் இருள தொடங்கியது.

ஆனால் நள்ளிரவில், அந்த வெண்ணிலவே இறங்கி வந்தார் போல் கொள்ளை அழகு கொண்ட பெண் ஒருத்தியை தன் அருகில் இருப்பதை கண்டான். அவனால் புரிந்து கொள்ள முடியாத உணர்வு அவனை ஆட்கொண்டது. பல்லாயிரம் கேள்விகள் அவனை சுற்றி வந்தன.  

இவள் யாரோ?

என் கல் நெஞ்சை கரைக்க முற்பட்டவள்

தனிமையில் மயங்கி கிடந்த என்னை

தட்டி எழ்ப்பியவள்

இருண்டு போன என் முகத்தில்

சிரிப்பை ஏற்றி வைத்தவள்

கோழையாய் சுருண்டு கிடந்த என்னையும்

சிறிது கட்டி அனைதவள்

ரத்தம் சொட்டும் என் காயங்களில்

அன்பை அள்ளி தெளித்தவள்

அந்த வெண்ணிலவின் நிலவொளியில்

மின்னலாய் ஜொலிக்கின்ற

இவள் யாரோ?

இறைவன் அருளிய வரமோ? – இல்லை

என் கண்கள் காணும் கனவோ?

இவள் யாரோ? 

அந்தப் பெண் அவனை நோக்கி,  “ராஜாவே கலங்கவேண்டாம், நான் உங்கள் காயங்களுக்கு மருந்து போட வந்துள்ளேன். என் பாட்டை கேட்டால் உங்கள் வலிகள் எல்லாம் மறைந்துவிடும்” என கூறியவாறு அவள் ஒரு பாடலை பாட தொடங்கினால். அவன் வாழ்வில் என்றும் கேட்டிராத அவன் மனதை கொள்ளை அடித்த பாடல் அது.

காலத்தையும் நேரத்தையும் கடந்து

என் பூட்டிய இதயத்தில் நுழைந்த

அந்த அற்புத குரல்

அவளின் அற்புத பாடல்

கவலைகள் மறந்து

கண்ணீர்கள் மறைந்து

தாயின் அரவணைப்பில் மயங்கி கிடந்த

குழந்தையை போன்ற உணர்வு

அந்த இனிய பாடலில் தன்னையே மறந்து நின்றான் மன்னன்.

சூரியன் கிழக்கு திசையில் உதிக்க தொடங்கிய நொடியில் அந்த பாடல் சட்டென்று நின்றுவிட்டது. ​​அந்தப் பெண் அவனைப் பார்த்து புன்னகைத்து, “உங்கள் காயங்கள் கிட்டத்தட்ட குணமாகிவிட்டன. இதற்கு மேல் நாம் இருவரும் சந்திக்க வாய்ப்பில்லை. உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி” என கூறியவாறு அந்த மெல்லிய காற்றில் அவள் மறைந்து போனால்.   ராஜவிற்க்கோ அந்த இரவு ஒரு கனவு போல் தோன்றியது – அவன் என்றைக்கும் மறக்க முடியாத கனவு அது. காலை வெயில் சுட்டெரிக்க, மெல்ல மெல்ல நடந்து அவன் கோட்டையை அடைந்தான். இத்தகைய கொலை முயற்சி எல்லாம் ராஜாவிற்கு ஒன்றும் புதிதல்ல. அவன் மந்திரிகளின் சூழ்ச்சிகள் எல்லாம் அவனுக்கு பழகி போன ஒன்றுதான். தனது முகத்தில் தெரிந்த பயத்தை எல்லாம் புன்னகையில் மறைத்து கொண்டு, அந்த மந்திரிகளை நோக்கி, “ உங்களால் முடிந்தது இவ்வளவு தான?” என கூறியவாறு தன் அறையை நோக்கி நடந்தான்.

அன்று முதல் அந்த பெண்ணை பற்றிய நினைவுகள் அவனை வட்டமிட தொடங்கின. அற்புத நிலவொளியில் அவன் கண்ட அந்த கனவு அவன் இரவுகளை ஆக்கிரமித்தது. ஆர்வத்தை கட்டுபடுத்த முடியாமல், ராஜா அவளை மீண்டும் கண்டுபிடிக்க முடிவு செய்தான். அன்று இரவு, ஒரு சாதாரண மனிதனை போல் மாறுவேடமிட்டு காட்டை அடைந்தான். அவன் சுற்றிலும் எல்லா திசைகளிலும் தேடியும் அந்த ஆலமரம் அவன் கண்களில் அகப்படவில்லை. ஆனாலும் அவளை மறுபடியும் காண வேண்டும் என்ற ஆவல் அவனை ஆட்கொண்டதினால் பைத்தியம் போல் அந்த காட்டை சுற்றி சுற்றி வந்தான். அவன் கால்கள் வலிமை இழந்து அவன் பூமியில் சரிந்த அந்த நொடியில், அந்த ஆலமரம் அவன் கண்முன் தோன்றியது. ஆலமரத்தின் அடியில் நின்றுகொண்டிருந்த அந்த பெண் ராஜாவை நோக்கி ஓடி வந்து, அவனை கைத்தாங்கலாக ஆலமரத்தின் அடியில் படுக்க வைத்தால். அத்தகைய சூழ்நிலையிலும் ராஜா முகத்தில் ஒரு பெரிய புன்னகையுடன், அவள் கைகளைப் பிடித்து, “இறுதியாக, நான் உன்னைக் கண்டுபிடித்துவிட்டேன். இப்போதாவது நீ யார் என்ற ரகசியத்தை எனக்கு கூறுவாயா? ” என்று கேட்டான். அந்தப் பெண் சிரித்துக் கொண்டே “நான் யார் என தெரிந்து கொள்வதற்காக இந்த காட்டிற்கு திரும்பி வந்த முதல் நபர் நீங்கள் தான். நான் இந்த மரத்தில் பல வருடங்களாக வாழ்ந்து வரும் வன தேவதை. இதற்கு முன், நான் பக்கத்து கிராமத்தில் ஒரு மருத்துவச்சியாக வாழ்ந்து வந்தேன். ஒரு பயங்கரமான கொள்ளை நோய் என் கிராமத்தில் பரவ தொடங்கியது. ஒரு மருத்துவச்சியாக என் மக்களின் உயிரை காப்பாற்ற என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அன்று இரவு என் கனவில் தோன்றிய தேவதை, உன் மக்களின் உயிருக்கு ஈடாய் உன் உயிரை தருவாயா? என வினவியது. நிச்சயம் தருவேன் என கூறிய அந்த நொடியில், அந்த கொள்ளை நோயுடன் நின்று போனது. என் உடலும் மறைந்து போனது. பல நாட்களாய் இந்த காட்டை சுற்றி வந்த என் ஆன்மா இறுதியில் இந்த ஆலமரத்தில் தஞ்சம் அடைந்தது. இந்த மரத்தின் உதவியினால் இரவுகளில் மட்டும் மனித உருவில் என்னால் நடமாட முடிகிறது. அன்று முதல் இந்த காட்டில் உதவியை நாடி வரும் அனைவருக்கும் என்னால் இயன்ற உதவிகளை செய்து என் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்” என்றால் அவள்.

பேராசை மனிதர்களின் மத்தியில் வாழ்ந்த அவனுக்கு அவளின் கதை விநோதமாய் தோன்றியது

“பாலைவனத்தில் பூத்த பன்னீர் ரோஜா!!” என நினைத்து தனக்குளே சிரித்து கொண்டான்.   

அந்த இரவு முடிவுக்கு வந்தது, அந்த பெண் மறைந்து போனால், ராஜா தனது கோட்டைக்குத் திரும்பினான். அன்றுமுதல்  ஒவ்வொரு இரவும் அவளை சந்திக்க ராஜா காட்டிற்கு சென்றான். அவன் காட்டின் மைய பகுதியை அடைந்ததும் “யாரவது காப்பாற்றுங்களேன்” என கூக்குரலிடுவான். விசித்திரமாக தோன்றினாலும் அந்த பெண்ணை காண்பதற்கான ஒரே வழி இது தான். இராமுழுதும் அவளின் இனிய சொற்களில் ராஜா தன் கவலைகளை மறந்து இன்பத்தில் திளைத்திருந்தான். இந்த இரவு இன்னும் கொஞ்ச நேரம் தொடர கூடாதா? என அவன் மனம் ஏங்கியது. இந்த சந்திப்புகள் பல நாட்கள் தொடர்ந்தன         

ஒரு நாள் காட்டில் இருந்து கோட்டையை நோக்கி செல்லும் வழியில், ஒரு வயதான மனிதர் கோட்டை வாயிலில் மயங்கி கிடப்பதை ராஜா கண்டான். அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்று அவரை மிகவும் அக்கறையுடன் ராஜா கவனித்து வந்தான். அந்த மனிதன் கண்விழித்ததும் ராஜா அந்த முதியவருக்காக மிகபெரிய விருந்தொன்றை செய்வித்தான். அவனது ராஜ்யத்தின் மிகச்சிறந்த உணவுகள் விருந்தில் பரிமாறப்பட்டன. ராஜாவின் உபசரிப்பில் நெகிழ்ந்து போன அந்த பெரியவர் ராஜாவை நோக்கி “இந்த பிரபஞ்சத்தைப் தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கும் ஏழு பெரிய மந்திரவாதிகளில் நானும் ஒருவன். அன்றிரவு ஒரு அரக்கனோடு போராடி வெற்றி கொண்டதில் என் சக்திகள் குறைந்து நான் மயங்கி விழுந்தேன். இந்த வயதானவரை நீ புறக்கணித்திருக்கலாம், ஆனால் என்னை அக்கறையுடன் கவனித்து கொண்ட உனக்கு நான் நன்றிகடன்பட்டுள்ளேன்.   

ராஜாவே உனக்கு என்ன வேண்டுமோ கேள்

முடிவற்ற செல்வமா

காலத்தை கடந்த பேர்புகழா

உன் எதிரிகளின் இன்னுயிரா இல்லை

உன் ராணியாக அந்த தேவதையா

எதுவாக இருந்தாலும் நான் உனக்கு தருகிறேன் கேள்

என்றார் அந்த மந்திரவாதி

– கதை தொடரும்

ராஜாவின் ஆசை என்னவாக இருக்கும்?

அவன் ஆசை நிறைவேறுமா?

உங்கள் கேள்விகளுக்கான பதில் 14.6.2020 அன்று மதியம் 12.00 மணிக்கு வெளியாகும். அதுவரை காத்திருங்கள்.

உங்கள் கருத்துக்களை நிச்சயம் பதிவு செய்யுங்கள். ஒரு வேலை நீங்கள் ராஜாவாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? உங்கள் கதைகளை கேட்க ஆர்வமாக உள்ளேன்.

இந்த கதையின் ஆங்கில பதிவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்https://iamatextrovert.wordpress.com/2020/06/07/the-lonely-king-and-the-forest-spirit/