Posted in bromance, fiction, modern, Uncategorized

கெட்ட குமாரன் 2.0 – பாகம் III

காலேப் தன் கண்களைத் திறந்து சுற்றிப் பார்த்தான். அவனை எல்லையற்ற இருள் சூழ்ந்திருந்தது. எங்கும் அமைதி. அந்த இருண்ட உலகில் ஒரு சிறுவனின் அழுகுரல் காலேபின் காதுகளை எட்டியது. தன்னையும் அறியாமல் அந்த குரலை நோக்கி நடக்க தொடங்கினான். வெகுதூரம் நடந்து சென்று ஒரு கதவை அடைந்தான். ஏதோ ஒரு வேகத்தில் அந்த கதவை திறந்து உள் நுழைந்தான். முடிவே இல்லாத பாதாளம் போல கீழே சுழன்று செல்லும் படிகட்டுகள் அவன் கண்களில் தென்பட்டன. அந்த அழுகுரல் அதிகரிக்க தொடங்கியது. தன் பயத்தையும் மீறி அந்த குரல் வந்த திசையில் அந்த படிகளில் இறங்கினான். மணி கணக்காய் நடந்து இறுதியில் ஒரு அறையை அடைந்தான் காலேப். அந்த அறையை சுற்றி கண்ணாடி சுவர்கள். அந்த அறையின் மூலையில் ஒரு சிறு படுக்கை. அந்த படுக்கையின் அருகில் ஒரு 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் அழுது கொண்டிருந்தான்.

மெதுவாக அந்த சிறுவனிடம் சென்று அவன் கண்ணீரை துடைக்க முற்பட்டான் காலேப். அந்த சிறுவனின் முகத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான். அந்த சிறுவனின் முகம் அச்சுஅசல் காலேபின் சிறு வயது தோற்றத்தை போலவே இருந்தது. மேலும் அந்த சிறுவனின் உடல் முழுதும் காயங்கள் பரவி இருந்தன. சில காயங்கள் ஆறா வடுவாய் மாறி இருந்தன. அவன் இதயத்தின் அருகில் இருந்த காயத்தினின்று ரத்தம் இன்னும் சொட்டிக் கொண்டிருந்தது. “இந்த பிஞ்சு உடலை காயப்படுத்திய அந்த கொடூர மனிதன் யார்?” என தனக்குள்ளே கோபம் கொண்டான். அந்த சிறுவனின் நிலையை கண்டு அவன் கண்கள் தானாய் கலங்க ஆரம்பித்தது. தன் மெல்லிய குரலில் அந்த சிறுவனை நோக்கி, “ஏய் குட்டி, உன் பெயர் என்ன? நாம் எங்கிருக்கிறோம்? உன்னை காயப்படுத்தியது யார்? என்னிடம் கூறுவாயா?” என கேட்டான் காலேப். அந்த சிறுவன் தன் கண்ணீரை துடைத்து கொண்டு, கலேபை நோக்கி “காலேப் உனக்கு ஞாபகம் இல்லையா? நான் தான் நீ. நான் உன் ஆன்மா. நீ இப்போது உன் ஆழ்மனதில் இருக்கிறாய். இந்த காயங்களை எல்லாம் எனக்கு கொடுத்ததும் நீ தான். நீ உன் கண்ணீரை மறைக்கும் போதெல்லாம், உன் கவலைகளில் மூழ்கும் போதெல்லாம், உன் ஆசைகளை குழி தூண்டி புதைக்கும் போதெல்லாம், உன் வேதனைகளில் தனந்தனியாய் தவிக்கும் போதெல்லாம், உன் உணர்சிகளை வெறுக்கும் போதெல்லாம் நீ உன்னையே அறியாமல் என்னை காயப்படுத்தினாய். காலபோக்கில் அந்த நினைவுகள் மறந்து போகலாம். ஆனால் காயத்தின் வடுக்கள் என்றும் மாறாது காலேப்” அந்த சிறுவன் கூறினான்.

செய்வதறியாது திகைத்து நின்றான் காலேப். அந்த சிறுவனின் கரங்களை இறுக்கமாய் பற்றி கொண்டு “ என்னை மன்னித்து விடு. தயவு செய்து என்னை மன்னித்து விடு. இந்த காயங்களுக்கு எல்லாம் நானே காரணமாகிவிட்டேன். உன்னை காயப்படுத்திய பாவியாகிவிட்டேன். இந்த முட்டாளை தயவு செய்து மன்னித்து விடு” என கதறினான் காலேப். அந்த சிறுவன் காலேபின் கண்ணீரை துடைத்துவிட்டு “இந்த காயங்களை குணப்படுத்த ஒரே ஒரு வழி தான் உள்ளது. அதற்க்கு நீ உன் கடந்த காலத்து வலிகளை எதிர்க்கொள்ள வேண்டும். நீ மறக்க நினைக்கும் நிகழ்வுகளை மீண்டும் ஒரு முறை திரும்பி பார்க்க வேண்டும். உன் பயங்களை எதிர்த்து நீ போராட வேண்டும். அதற்க்கு நீ தயாரா காலேப்?” என கேட்டான் அந்த சிறுவன். லேசாக தலையை அசைத்தான் காலேப். “சரி வா, நாம் கிளம்புவோம். நம்மிடம் அதிக நேரம் இல்லை” என கூறிவிட்டு காலேபின் கரங்களை இறுக்கமாய் பற்றி கொண்டான் அந்த சிறுவன். விரைவில் அந்த அறை முழுதும் வெளிச்சத்தால் நிரம்பியது. ஒரு கணத்தில் காலேபும் அவன் ஆன்மாவும் ஒரு மருத்துவமனை அறைக்குள் கொண்டு செல்லப்பட்டனர்.          

 குட்டி காலேபிற்கு சுமார் 6 வயது இருக்கும், ஏஞ்சலோ ஒரு சிறு குழந்தை. புற்றுநோயின் காரணமாக காலேப்பின் தாய் மரண படுக்கையில் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குட்டி காலேப் தனது அம்மாவின் கரங்களை இறுக்கமாய் பற்றிக் கொண்டு அமர்ந்திருந்தான். இது தான் தனது கடைசி நொடிகள் என உணர்ந்த அவன் தாய், குட்டி கலேபை நோக்கி, “ காலேப், அம்மா சொல்வதை கவனமாக கேள். நான் என் குட்டி கலேப் மேல் அளவற்ற அன்பு வைத்திருக்கிறேன். ஆனால் நான் வெகுதூரம் போக வேண்டிய நேரம் வந்துவிட்டது. என் குட்டி காலேப் புத்தியுள்ள, வலிமை நிறைந்த மனிதனாய் வளர வேண்டும். இந்த உலகமே பொறமை பட கூடிய அளவு நல்ல மகனாய் வாழ வேண்டும். எஞ்சலோவையும் அப்பாவையும் பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும். அவர்கள் சந்தோஷத்தை நீ பாதுகாக்க வேண்டும். அதோடு…………………….” அவள் சொல்லி முடிப்பதற்குள் அந்த அறையில் இருந்த கருவிகள் பீப் பீப் என ஒலிக்க தொடங்கின. டாக்டர்கள் வேக வேகமாய் அந்த அறைக்குள் நுழைந்தனர். பணிப்பெண் குட்டி கலேபை அந்த அறையில் இருந்து வெளியே அழைத்து வந்தாள்.

அன்று இரவு முழுதும் காலேப் அந்த அறையின் வாசலில் நின்று அழுதுக் கொண்டிருந்தான். தன் அம்மாவை பார்ப்பது இது தான் கடைசி முறை என அவன் அறிந்திருந்தான். அவன் அந்த அறை இருந்த பக்கமாய் திரும்பி “அம்மா, நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள். எஞ்சலோவையும் அப்பாவையும் நான் பார்த்துக் கொள்கிறேன். அவர்களின் புன்னகையை பாதுகாக்கும் அளவிற்கு சக்தி உள்ளவனாய் நான் மாறுவேன். அதற்க்கான விலை என்னவாக இருந்தாலும் – என் மகிழ்ச்சியாகவே இருந்தாலும் நான் நிச்சயம் தருவேன். இந்த உலகம் இது வரை பார்த்திராத நல்ல மகனாய் நான் நிச்சயம் வாழ்வேன். நீங்கள் எதை பற்றியும் கவலை படாமல் போய் வாருங்கள் அம்மா” கண்ணீர் கலந்த புன்னகையுடன் கிசுகிசுத்தான் காலேப்.

வளர்ந்த காலேபும் அவன் ஆன்மாவும் இந்த காட்சிகளை எல்லாம் கண்டனர். “உனக்கு ஞாபகம் இருக்கிறதா காலேப்? இந்த நாள் தான் உன் வாழ்வே தலைகீழாக மாறிய நாள். சுட்டி தனமாய் சுற்றி வந்த குட்டி காலேப், உணர்ச்சிகள் இல்லாத ரோபோட்டாய் மாறிய நாள் அன்று தான். ஆனால் நீ உன் தாயின் கடைசி ஆசையை முழுவதும் கேட்காமலே போய் விட்டாய் காலேப்” அந்த ஆன்மா வருத்ததுடன் கூறியது. தன் தாய் தன்னிடம் சொல்ல நினைத்த அந்த கடைசி வரிகள் அந்த நொடியில் அவன் கண் முன் ஓட தொடங்கியது. டாக்டர்கள் படை சூழ தன் இறுதி நொடியில் காலேபின் தாய் புன்னகையுடன் “என் குட்டி இளவரசே, நீ எப்போதும் சந்தோஷமாக வாழ வேண்டும்” என கூறி விட்டு கண்களை மூடினாள் அவன் தாய்.

“அன்றிரவு உன் தாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற நீ உன் உணர்ச்சிகளை எல்லாம் குழி தோண்டி புதைத்து விட முடிவு செய்தாய். மற்றவர்களுக்காய் வாழும் வாழ்கையை தேர்வு செய்தாய். உன் குடும்பத்தின் சந்தோஷத்திற்க்காய் எதையும் செய்ய துணிந்தாய். ஆனால் முக்கியமான ஒன்றை நீ மறந்து விட்டாய் காலேப் – அது தான் உன் சந்தோஷம், உன் கனவுகள். உன் ஆசைகள், உன் சிரிப்பு. மற்றவர்களுக்காய் வாழ்ந்த உன் வாழ்வில் உனக்காக நேரம் ஒதுக்க நீ மறுத்து விட்டாய். உன் சந்தோஷத்தை காப்பாற்ற தவறி விட்டாய் காலேப்” அவன் ஆன்மா கூறியது. காலேபின் கண்களில் கண்ணீர் புரள ஆரம்பித்தது. இந்நாள் வரை அவன் வாழ்ந்த வாழ்கை நினைவுக்கு வந்தது. மூச்சுக்கு முன்னுறு முறை தன் தந்தையின் சிரிப்பை கண்டு மகிழ்ந்த காலேப் ஒரு முறை கூட தன் முகத்தில் சிரிப்பு இருக்கிறதா? என யோசித்து இல்லை. ஒரு முறை கூட அவன் தனக்காய் நேரம் செலவிட்டது இல்லை. உலகத்தின் கண்களில் கறை திரை அற்ற கச்சிதமான அவன் வாழ்க்கை உண்மையில் வெறுமை நிறைந்ததாய் மாறி போனது”. என்னை மன்னித்து விடுங்கள் அம்மா. உங்கள் கடைசி ஆசையை கூட என்னால் நிறை வேற்ற முடிய வில்லை. என்னையே நான் நேசிக்க கற்று கொள்ளாத முட்டாள் ஆகி விட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள். என்னை மன்னித்துவிடுங்கள்” கண்ணீருடன் கூறினான் காலேப். முன்பை விட அந்த சிறுவனின் கரங்களை இறுக்கமாய் பற்றிக் கொண்டான்.                      

பின்னர் மீண்டும் காலேபும் அவன் ஆன்மாவும் யாங் மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அது காலேபின் தாயார் மறைந்து 16வது நாள். வின்சென்ட் தன் மனைவிக்காக ஒரு நினைவு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். குட்டி கலேபிற்கு மற்ற மனிதர்களை சந்திக்கும் மனம் இல்லை. அதனால் வீட்டில் இருந்த ஒரு விருந்தினர் அறையில் ஒளிந்திருந்தான். 16 நாட்கள் ஆகியும் தன் தாய் தன்னை விட்டு பிரிந்ததை குட்டி கலேபால் ஏற்க முடிய வில்லை. தன் தாயின் இனிய குரல், வெண்ணிலவை போன்ற அழகு முகம் மற்றும் அவளின் பொன் சிரிப்பை மீண்டும் ஒரு முறை காண மாட்டோமா என்ற ஏக்கம் குட்டி கலேபை வாட்டி வதைத்தது. ஒவ்வொரு இரவும் கண்ணீருடன் தான் படுக்கைக்கு சென்றான் காலேப். அழுது அழுது கண்கள் எல்லாம் சிவந்திருந்தன. அந்த விருந்தினர் அறையில் தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்த கலேபிற்கு அந்த அறைக்குள் நுழையும் ஒரு பெண்ணின் சத்தம் கேட்டது. அந்த பெண் எதோ விருந்து வீடிற்கு வந்தது போல் சிரித்து சிரித்து யாருடனோ செல்போனில் பேசிக் கொண்டிருந்தாள். அவள் சிரிப்பு சத்தம் குட்டி கலேபிற்கு கோபத்தை தூண்டியது. அந்த பெண் “இது எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு. இன்னும் கொஞ்ச நாட்கள் இங்கிருந்து என் நடிப்பு திறனை எல்லாம் பயன்படுத்தி அந்த 2 குட்டி குரங்குகளின் மனதில் இடம் பிடித்தால் போதும்.  அந்த முட்டாள் வின்சென்ட் என் வலையில் சிக்கிக் கொள்வான். பின்னர் என்ன, அந்த வின்சென்ட்டை நான் திருமணம் செய்துக் கொண்டு இந்த யாங் சாம்ராஜ்யத்தின் ராணியாக வளம் வருவேன். அந்த 2 குட்டி பிசாசுகளையும் எங்காவது தூர தேசத்திற்கு அனுப்பி விடுவேன்” அந்த பெண் வில்லத்தனமாக சிரித்தாள். குட்டி கலேபால் தன் காதுகளில் விழுந்த இந்த வரிகளை இன்னும் நம்ப முடிய வில்லை. மெல்ல தான் ஒளிந்திருந்த இடத்தில் இருந்து நகர்ந்து அந்த பெண் யாரென காண முயன்றான். குட்டி கலேபிற்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்த பெண் வேறு யாரும் இல்லை – அவன் தாயின் அன்பு சகோதரி தான். அவன் எப்போதும் நம்பியிருந்த அவளின் இனிய புன்னகையின் பின்னால் ஒளிந்திருந்த கொடூர பேராசையை காலேப் ஒரு நாளும் எதிர் பார்க்க வில்லை. அன்றிரவு அந்த 6 வயது சிறுவன் மனிதர்களின் இதயங்களில் குடியிருந்த பேராசை என்னும் அரக்கனை முகமுகமாய் கண்டான். மனிதர்களின் மீது இருந்த நம்பிக்கையை முற்றிலும் இழந்தான். தன் இதயத்தின் கதவுகளை இறுக்கமாய் அடைத்து கொண்டான் காலேப். அன்றிரவிற்கு பின் அவன் ஒரு உயிரையும் முழுமையாய் நம்பியதில்லை. தன் குடும்பத்தை பாதுகாக்க தனிமை தான் ஒரே ஆயுதம் என முடிவு செய்தான். அன்று முதல் எந்த உறவினர்களையோ நண்பர்களையோ அவன் வீட்டிற்குள் அனுமதித்ததில்லை. தன்மையில் இனிமை காண அவன் தன்னை தயாராக்கி கொண்டான்.

“அன்று நீ தனிமையை உன் உற்ற நண்பனாய் தேர்ந்தெடுத்துக் கொண்டாய். உன் கோபம் சரி தான். உன்னை சுற்றி இருந்த அநேக மனிதர்கள் பேராசையினால் குருடக்கப்பட்டவர்கள் தான். ஆனால் பேராசையால் கறைபடாத, கள்ளம் கபடற்ற சிலர் உன் வாழ்வை வண்ண மையமாக்க முயற்சித்தனர். ஆனால் நீ அவர்கள் அன்பை உதறி தள்ளி விட்டு இருண்ட வாழ்கையை தேர்ந்தெடுத்தாய். ஞாபகம் இருக்கிறதா? சிறுவயதில் நம் வீட்டில் வேலை செய்த அந்த வயதான சமையல்காரி – அவள் ஒவ்வொரு இரவும் நீ தூங்க சென்ற பின் உனக்கு போர்வை போத்தி, உன் நெற்றியில் முத்தமிட்டு செல்வாள், அவளின் அன்பு ஒரு நாளும் உன்னிடம் எதையும் எதிர்பார்க்க வில்லை. பள்ளியில் உன் பக்கத்துக்கு இருக்கையில் அமர்ந்திருந்த அந்த கண்ணாடி போட்ட மாணவி – அவள் உன் கண்களில் நிறைந்திருந்த சோகத்தைக் கண்டால், உனக்கு உதவ முயற்சித்தால். ஆனால் நீ அவள் மனதை உடைத்து விட்டாய். அந்த ஜாங் – குழந்தையை போல் உன்னையே சுற்றி வந்தானே. கல்லூரியில் – அவன் ஒவ்வொரு நாளும் நீ 3 வேலை சாப்பிடுகிறாயா என உனக்கே தெரியாமல் உன்னை கவனித்து வந்தான், நீ சாப்பிட வில்லை என தெரிந்த ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி உன்னை உணவகத்திற்கு அழைத்து சென்று உன்னை உண்ண வைத்தான். ஒரு நாள் இரவு உன் உடம்பு ஜுரத்தால் கொதித்துக் கொண்டிருந்ததைக் கண்டு அவன் பதறி அடித்துக் கொண்டு அவன் அம்மாவிற்கு போன் செய்தான், உன்னை எப்படி பார்த்து கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டான். தட்டு தடுமாறி அன்றிரவு அவன் உனக்காக கஞ்சு கூட சமைத்தான். ஹாஹா! அவன் உன்மேல் அவ்வளவு மதிப்பு வைத்திருந்தான். அத்தனை வருடங்களுக்கு பின் நீ அவனிடம் உதவி என நின்ற போது ஒரு நொடி கூட யோசிக்கமால் உனக்காக ஓடி வந்து உதவி செய்தான். இந்த உலகம் கொடியது தான். ஆனால் இதிலும் சில உன்னத மனிதர்கள் இன்னும் வாழ தான் செய்கிறார்கள். இந்த உலகத்திற்கு எதிரான உன் போரில் உன்னை பாதுகாத்துக் கொள்ள நீ தனிமையை தேர்ந்தெடுத்து இவர்களை போன்ற வைரத்திலும் விலை ஏற பெற்ற மனிதர்களின் அன்பை கவனிக்காமலே போய் விட்டாய் காலேப்” அவன் ஆன்மா சோக குரலில் கூறியது.

தான் எவ்வளவு பெரிய தவறு இழைத்து விட்டோம் என காலேப் உணர்ந்தான். அவனின் இருண்ட தனிமை வாழ்வை நினைத்து வருந்தினான். வாழ்க்கை அவனுக்கு தந்த அந்த உன்னத மனிதர்களின் உண்மை அன்பை உணராத தன் முட்டாள் தனத்தை நினைத்து கலங்கினான். சோகம் தொண்டையை அடைத்தது. கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.  “என்னை மன்னித்துவிடுங்கள், என்னை மன்னித்துவிடுங்கள்” இந்த வார்த்தைகள் மாட்டும் அவன் வாயிலிருந்து வெளிப்பட்டது.                                     

பின்னர் மீண்டும் காலேபும் அவன் ஆன்மாவும் ஒரு மருத்துவமனை அறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் இந்த முறை படுக்கையில் இருந்தது காலேப். வின்சென்ட் தன் மகனின் கரங்களை இறுக்கமாய் பற்றிக் கொண்டு அழுதுக் கொண்டிருந்தார். ஏஞ்சலோவும் ஜாங்கும் காலேபின் உடலின் அருகில் நின்று அழுதுக் கொண்டிருந்தனர். “நாம் எங்கிருக்கிறோம்?” காலேப் தன் ஆன்மாவிடம் கேட்டான். “உனக்கு ஞாபகம் இல்லையா காலேப்? எஞ்சலோவை துணை தலைவராக நியமிக்க அப்பா கையெழுத்திட்டிருந்த அந்த பையிலை கண்டு நீ பித்து பிடித்த மனிதனை போல் உன் காரை ஒட்டி சென்றாயே. ஒரு லாரி மோதியதில் நீ படுகாயம் அடைந்து கோமாவில் இருக்கிறாய்” என அவன் ஆன்மா கூறியது. அந்த நீல நிற பைல் இன்னும் அருகில் இருந்த மேசையில் தான் இருந்தது. “ஆனால் காலேப் நீ வாழ்க்கையில் செய்த மிக பெரிய தவறு அது தான். நீ அதை செய்திருக்க கூடாது காலேப். உன் தந்தையின் அன்பை நீ ஏன் நம்ப மறுக்கின்றாய்? அந்த வார்த்தைகளை பார்த்த அந்த நொடியில் நீ இத்தனை நாட்கள் மறைத்து வைத்திருந்த உன் பயம் உன் கண்களை மறைத்து விட்டது, உண்மையை உணர விடாமல் உன்னை தடுத்து விட்டது. இப்போதும் கூட நீ அவர்களின் அன்பிற்கு தகுதியற்றவனாய் உணர்கிறாய். ஏன் காலேப்? உன் தோல்விகள், உன் பொறாமைகள், உன் பலவீனங்கள் மற்றும் உன் கண்ணீரை கண்டால் அவர்கள் உன்னை வெறுத்து விடுவார்கள் என ஏன் அஞ்சுகிறாய்? ஏன் காலேப்? ஏன்? நீ அவர்களை நம்பி இருக்க வேண்டும் காலேப், நம்பி இருக்க வேண்டும். அவர்களின் அன்பிற்கு நீ தகுதியானவன் தான் என ஒரு நொடி நீ உணர்ந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்காது. நீ பெரிய தவறு செய்து விட்டாய் காலேப்! மிக பெரிய தவறு!” காலேபின் ஆன்ம கதற தொடங்கியது.

“நீ தகுதியானவன் தான்

உன் வெற்றிகளை அல்ல

உன் பரிசுகளை அல்ல

உன் சாதனைகளை அல்ல

உன் நிறைவுகளை அல்ல

உன்னை தான்

உன்னை தான் அவர்கள் நேசிக்கிறார்கள்

உன்னை

உன் பலவீனங்களை

உன் உணர்ச்சிகளை

உன் கோபங்களை

உன்னை தான்

அவர்கள் நேசிக்கிறார்கள்

இதை நீ ஏன் ஏற்க மறுக்கிறாய்

சொல்! சொல்!”                

காலேபின் ஆன்மா கண்ணீருடன் அவன் சட்டையை இறுக்கமாய் பிடித்து கதறியது.

அவன் ஆன்மா அந்த மேசையில் இருந்த அந்த நீல நிற பையிலை கலேபிடம் நீட்டியது. காலேப் அன்று பார்த்த அதே காகிதம் இதில் இருந்தது. ஆனால் அவன் அன்று கவனிக்க தவறியதென்ன வென்றால், அதே காகிதத்தின் கீழ் வேறு ஒரு ஆணை இருந்தது. வின்சென்ட் தன் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டு கலேபை யாங் பேரரசின் அடுத்த தலைவராக நியமிக்க வழங்கப்பட்ட ஆணை அது. அதின் இறுதியில் வின்சென்டின் கையொப்பம் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த வார்த்தைகளை காண்டதும் காலேபின் இதயம் ஒரு நொடி துடிப்பதையே மறந்து நின்றது. அவன் அத்தனை நாட்கள் பூட்டி வைத்திருந்த உணர்ச்சிகள் எல்லாம் எரிமலையாய் வெடிக்க தொடங்கியது. அந்த நொடி காலேப் கதறி கதறி அழுதான் – பைத்தியக்காரனைப் போல கூச்சலிட்டு அழுதான். தன் ஆன்மாவை இறுக்கமாய் அனைத்துக் கொண்டு அவன் கண்களில் கண்ணீர் கரையும் வரை அழுதான். அதற்குள் இருவரும் மறுபடியும் அந்த கண்ணாடி அறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அந்த சிறுவனின் கரங்களை இறுக்கமாய் பற்றி கொண்ட காலேப் “இந்த உலகத்தின் மிக பெரிய முட்டாளாய் நான் இத்தனை நாட்களாய் வாழ்ந்து வந்திருக்கிறேன். என்னை நானே உதாசீனப்படுதினேன். என் மேல் அன்பு வைத்தவர்களையும் காயப்படுத்தினேன். இவை அனைத்திற்கும் மேல் என் தந்தையின் அன்பிற்கு நான் தகுதி இல்லாதவன் என வாழ்நாள் முழுதும் அஞ்சினேன். என்னை மன்னித்து விடு. உன்னை இத்தனை நாட்கள் நான் காயப்படுத்திக் கொண்டிருந்தேன். நான் முட்டாள் தான். ஆனால் இன்னும் ஒரு முறை – இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு. இத்தனை நாட்கள் நான் வீணாக்கிய என் வாழ்வை சீரமைக்க ஒரே ஒரு வாய்ப்பு. என் இருண்ட வாழ்கையை ஒளிமயமாக்க ஒரே ஒரு வாய்ப்பு, என் வாழ்வில் அன்பு மலர – என் தவறுகளை சரி செய்ய – மீண்டும் மனிதனாய் வாழ ஒரே ஒரு வாய்ப்பு கொடு” என அந்த சிறுவனின் கைகளை பிடித்து கெஞ்சினான்.

 அந்த நொடியில் காலேப் இது வரை கண்டிராத அதிசயம் அந்த அறையில் நிகழ தொடங்கியது. அவன் சிந்திய ஒவ்வொரு துளி கண்ணீரும் அந்த சிறுவனின் காயங்களை குணமாக்கும் அற்புத மருந்தாய் மாறியது. இருள் சூழ்ந்த அந்த உலகத்தில் வெளிச்சம் படர ஆரம்பித்தது. அற்புத புன்னகையுடன் மின்னலை விடவும் ஒளிமயமாய் அந்த சிறுவன் ஒளிர தொடங்கினான். காலேபின் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்த அந்த சிறுவன் “உன் தவறுகளை எல்லாம் நீ உணர்ந்துவிட்டாய் காலேப். இப்போது திரும்பி செல் என் குட்டி காலேப். உன் வாழ்வை வண்ணங்களால் நிரப்பிடு” அந்த சிறுவன் காலேபின் நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டு மறைந்து போனான்.

வார்த்தைகளால் விளக்க முடியாத பிரகாசம் அந்த இடத்தை நிரப்பியது. என்ன நடக்கிறது என காலேப் உணர்வதற்குள் “காலேப் எழுந்து விட்டான். சீக்கிரம் மருத்துவரை கூப்பிடுங்கள்” என கூறும் குரல் அவன் காதுகளை எட்டியது. சிறிது நேரத்தில் “காலேப் நான் பேசுவது கேட்கிறதா?“ என வேறு ஒரு குரல் கூறியது. காலேப் மெல்ல தன் கண்களை திறந்து பார்த்தான். தான் மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்தான். காலேப் அவன் ஆன்மாவுடன் இருந்த போது கண்டது போலவே வின்சென்ட் அவன் கைகளை இறுக்கமாய் பற்றிக் கொண்டு அவன் அருகில் அமர்ந்திருந்தார். எஞ்சலோவும் ஜாங்கும் கலங்கின கண்களுடன் நின்றுக் கொண்டிருந்தனர். “காலேப் கோமாவில் இருந்து எழுந்துவிட்டார். இனி எதை பற்றியும் கவலைபட தேவை இல்லை” வாசல் அருகே நின்று கொண்டு மருத்துவர் கூறிய அந்த வார்த்தைகளை கேட்டதும் வின்சென்ட், ஏஞ்சலோ, ஜாங் – மூவர் முகங்களிலும் அளவற்ற மகிழ்ச்சி பொங்கியது. காலேப் மெல்ல தன் படுக்கையில் இருந்து இறங்கி தத்தி தத்தி நடந்து வாசலை அடைந்தான். அந்த மூவரையும் இறுக்கமாய் அனைத்துக் கொண்டான். “நன்றி, என் மேல் நம்பிக்கை வைத்ததற்கு, என்னை நேசித்ததற்கு, எனக்காய் இத்தனை நாட்கள் காத்திருந்ததற்கு – மிக்க நன்றி” நால்வர் முகத்திலும் கண்ணீர் கலந்த புன்னகை தென்பட்டது. அன்று இரவு அந்த மூன்று மனிதர்களையும் காலேப் இறுக்கமாய் அனைத்துக் கொண்டான். அவனுக்கு கிடைத்த விலையேற பெற்ற இரண்டாம் வாழ்க்கை அது.            

காலேப்பின் கார் விபத்துக்குள்ளாகி 2 ஆண்டுகள் கடந்து விட்டன. கோமாவிலிருந்து எழுந்த பிறகு, காலேப் புதிய மனிதனாய் மாறினான். முகத்தில் 24 × 7  புன்னகையுடன் வளம் வந்தான். புதிய நண்பர்களை உருவாக்கி கொண்டான். கோமாவில் இருந்த எழுந்த சில மாதங்களிலேயே யாங் கார்ப்பரேஷனின் தலைவனாய் பதவி ஏற்றுக் கொண்டான், அவன் பொறுப்பேற்ற 1 வருடத்திலேயே யாங் நிறுவனத்தின் லாபம் இரட்டிப்பாக அதிகரித்தது. வின்சென்ட், காலேப் மற்றும் ஏஞ்சலோ மாதத்திற்கு ஒரு முறை ஊர் சுற்றுவதை பழக்கமாக்கி கொண்டனர். அவ்வாறு செல்லும் போதெல்லாம் காலேப் தன் அப்பாவின் கரங்களை பற்றிக் கொண்டு “இந்த உலகிலே அப்பா என்னை தான் அதிகம் நேசிக்கிறார்” என கூறுவான். உடனே ஏஞ்சலோ எங்கிருந்தாலும் ஓடி வந்து கலேபை தள்ளி விட்டு அவன் தந்தையை கட்டி அனைத்துக் கொண்டு “இல்லை இல்லை, உன்னை விட அப்பா என்னை தான் அதிகம் நேசிக்கிறார்” என கூறுவான். அப்போது வின்சென்ட் சிரித்துக் கொண்டே தன் இரு மகன்களையும் அனைத்துக் கொண்டு “இந்த உலகிலே என் இரு மகன்களை தான் நான் அதிகமாக நேசிக்கிறேன்” என கூறுவார். நீங்கள் நம்புவீர்களா என்ன? காலேப்பிற்கு ஒரு காதலி கூட இருந்தாள்!. தனது அப்பாவையும் எஞ்சலோவையும் தவிர அவன் வாழ்வில் வேறு யாருக்கும் இடம் இல்லை என கருதிய அவன் இதயத்தில் காதல் தானாய் மலர்ந்தது – பூட்டி இருந்த அவன் இதய கதவுகளை சுக்கு நூறாய் உடைத்தெறிந்தது. காலேபின் கல் நெஞ்சை கரைத்த அந்த அற்புத பெண் வேறு யாரும் இல்லை – காலேபின் செயலாளர் “நடாஷா” தான். காலேப் தனது தைரியத்தை எல்லாம் ஒன்று திரட்டி தன் காதலை அவளிடம் கூறினான். அவளும் நிறைந்த புன்னகையுடன் கலேபை ஏற்றுக் கொண்டாள். காலேப் காதல் பித்து பிடித்து சுற்றிய அந்த நாட்களில் நள்ளிரவில் அடிக்கடி ஜாங்கிற்கு வீடியோ கால் செய்வான். காதல் ஆலோசனை கேட்க. ஆனால் கலேபை கிண்டல் செய்வதையே ஜாங் வழக்கமாக கொண்டிருந்தான். “ஹாஹா, எல்லாம் வல்ல காலேப் யாங்கிற்கு என் உதவி தேவை படுகிறதா? நான் மிகபெரிய மேதை நீ ஒரு அடி முட்டாள் என ஒப்புக்கொள், நான் உன் கேள்விக்கு பதில் தருகிறேன்” என சிரித்துக் கொண்டு கூறினான் ஜாங். “சரி சரி, நான் ஒப்புக்கொள்கிறேன். நான் அடி முட்டாள், ஜாங் லிங்க் மிகபெரிய அறிவாளி. போதுமா? இப்போது சொல், அவள் பிறந்தநாளுக்கு நான் என்ன பரிசு வாங்கட்டும்?” என கூறினான் காலேப். அந்த நாட்கள் ஜாங்கிற்கு மகிழ்ச்சியை அளித்தன. தன் நண்பனின் மாற்றத்தைக் கண்டு அவன் மகிழ்ச்சி அடைந்தான்.

மற்றவர்களுக்காய் வாழ்ந்த அந்த நல்ல மகன் இறுதியில் தனக்காய் வாழ கற்றுக் கொண்டான். காதலை கண்டு அஞ்சியவன் அதை புன்னகையுடன் அனைத்துக் கொண்டான். தன் மகிழ்ச்சியையும் தன் வாழ்வின் காரணத்தையும் அவன் கண்டடைந்தான். இறுதியில் அவன் தன்னையே நேசிக்க கற்றுக் கொண்டான்.

வணக்கம்!!

கதாசிரியரிடம் இருந்து:

என் சிறு வயது முதல் கெட்ட குமாரனின் கதையை நான் ஆயிரம் முறை கேட்டிருக்கிறேன். பல வகையான அர்த்தங்கள், பல வகையான வியாக்கியானங்கள். ஆனால் ஒரு முறை கூட அந்த நல்ல குமாரனின் கதையை கூற ஒருவரும் முயற்சித்ததில்லை.

இந்த கதை நான் அவனுக்கு அளிக்கும் அன்பளிப்பு. அவனின் உணர்ச்சிகள், காயங்கள், பாதைகள் மற்றும் அவனின் மாற்றத்தையும் என்னால் முடிந்த அளவு வெளிப்படுத்தி இருக்கிறேன்.

இந்த கதை உங்கள் இதயத்தில் இடம் பிடித்திருக்கும் என நம்புகிறேன். உங்கள் கருத்துக்கள், கேள்விகள் அனைத்தையும் கேட்க ஆர்வமாக உள்ளேன். காலேப், ஏஞ்சலோ மற்றும் ஜாங்கை விட்டு பிரிய மனம் மறுக்கிறது. ஆனால் ஒவ்வொரு முடிவும் ஒரு புது துடக்கம் தான். அடுத்த கதை ஆகஸ்ட் 9 அன்று வெளியாகும்.

ஆதுவரை காத்திருங்கள் என் அன்பு வாசகர்களே.

இது போன்ற கதைகளை படிக்க இந்த தொகுப்பு பட்டனை கிளிக் செய்யுங்க.

இப்படிக்கு – கேதி!!      

 

Leave a comment